சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.52,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பவுன் ரூ.48 ஆயிரம், கடந்த மாதம் 9-ம் தேதி ரூ.49 ஆயிரம், 28-ம் தேதி ரூ.50 ஆயிரம், 29-ம் தேதி ரூ.51 ஆயிரம் என வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை அடைந்தது.
இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி, தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.6,500-க்கும் பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.52,000-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் பவுன் ரூ.55,760-க்கு விற்பனையாகிறது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.84-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.84,000 ஆக உள்ளது.
தங்கம் விலை அதிகரித்து வருவது குறித்து நகை வியாபாரிகள் கூறும்போது, “சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவைஅதிகரித்துள்ளது. மேலும், ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது அத்துடன், உள்நாட்டில் மக்களவைக்கான தேர்தல் நடைபெற இருப்பதால், பங்குச் சந்தைகளிலும் அதிகளவில் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இத்தகைய காரணங்களால் தங்கம்விலை அதிகரித்து வருகிறது” என்றனர். தங்கம் விலை அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.