மிக முக்கியமாக, ஸ்மார்ட்ஃபோன்களில் இருக்கும் UPI ஆப்ஸ்கள் நமது கட்டண முறையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. இந்த சூழலில் ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க, UPI விதிகள் அவ்வப்போது மாற்றப்பட்டு கொண்டே இருக்கின்றன. இப்போது புதிய விதிகள் வரும் ஜூன் 30, 2025 முதல் அமலுக்கு வர உள்ளன.
உண்மையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) UPI சிஸ்டமில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராக உள்ளது. இந்த மாற்றம் ஜூன் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. வரும் ஜூன் 30, 2025 முதல் கூகுள்பே, ஃபோன்பே மற்றும் பேடிஎம் போன்ற அனைத்து UPI-அடிப்படையிலான ஆப்ஸ்களும் இனி பரிவர்த்தனைகளின்போது பெறுநரின் அதிகாரப்பூர்வ பேங்க் அக்கவுன்ட் பெயரை மட்டுமே காண்பிக்கும்.
தற்போது UPI ஆப்ஸ்கள் பெறுநரின் பெயரையும், அனுப்புநர் தனது மொபைலில் சேமித்து வைத்திருக்கும் நம்பரையும் காட்டுகின்றன. அதாவது, தற்போது யூசர்களின் தொலைபேசியில் பணம் பெறுவோரின் பெயர் அல்லது புனைப்பெயர் போன்றவை தெரியும். புதிய விதிகளின் கீழ் இனி இந்த புனைப்பெயர் (nickname) தெரியாது. மொத்தமாக வரும் ஜூன் 30-க்குப் பிறகு, பணம் மாற்றப்படுவதற்கு முன்பு, பணம் பெறும் நபரின் அதிகாரப்பூர்வ வங்கி பதிவு செய்யப்பட்ட பெயரை UPI சிஸ்டம் தானாகவே காண்பிக்கும்.
முன்னதாக மோசடி செய்பவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க புனைப் பெயர்களை பயன்படுத்தினர். ஆனால், இப்போது இந்த விதி மாற்றத்தால் UPI மூலம் நடைபெறும் மோசடி தடுக்கப்படலாம். வரவிருக்கும் அப்டேட் சைபர் கிரிமினல்கள் செய்யும் மோசடிகளைத் தடுக்க மற்றும் பரிவர்த்தனையில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும் உதவும் நேரடி முயற்சியாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
யூசர்கள் மொபைல் நம்பர், UPI ஐடி அல்லது QR கோட் ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் அனுப்பினாலும், பணம் செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு முன் ஸ்கிரீனில் தோன்றும் பெயர், பெறுநரின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பெயரை மட்டுமே காட்டும். இந்த மாற்றம் நபருக்கு நபர் (P2P) மற்றும் நபருக்கு வணிகர் (P2M) பரிவர்த்தனைகளுக்கு ஒரே மாதிரியாக பயன்படுத்தப்படும்.
UPI பணம் செலுத்தும் முறை அப்படியே மாறாமல் உள்ளது. யூசர்கள் பரிவர்த்தனைகளைத் தொடங்க மொபைல் எண்கள், UPI ஹேண்டில்ஸ் அல்லது QR கோட்ஸ்களைப் பயன்படுத்தலாம். ஆனால் “Send” என்பதைக் கிளிக் செய்வதற்கு முன்பு பார்ப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்த நடவடிக்கை அதிகரித்துவரும் UPI தொடர்பான மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
- UPI ஆப்ஸ்கள் இனி வங்கிப் பதிவுகளிலிருந்து வேறுபடும் தனிப் பயனாக்கப்பட்ட அல்லது யூசர்கள் செட் செய்த பெயர்களைக் காட்ட முடியாது.
- குற்றவாளிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களை பழக்கமான அல்லது நம்பகமான பெயர்களை பயன்படுத்தி ஈர்க்கிறார்கள். யூசர்கள் சேமித்து வைத்துள்ள புனைப்பெயர்களை அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட பேங்க் அக்கவுன்ட் பெயர்களை காட்டுவதன் மூலம், மோசடிகள் செய்வது சைபர் கிரிமினல்ஸ்களுக்கு மிகவும் கடினமாகிறது.
- இந்த மாற்றம் பிரபலமான பிளாட்ஃபார்ம்கள் உட்பட இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து UPI பேமென்ட் ஆப்ஸ்களுக்கும் பொருந்தும்.
- பணம் செலுத்துவதற்கு முன்பு பெறுநரின் அடையாளத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த யூசர்களுக்கு முன்பைவிட தற்போது சிறப்பான வாய்ப்பு கிடைக்கும்.
- குறிப்பாக பொதுவான பெயர்களைக் கொண்டவர்களிடையே தவறான தொடர்புக்கு தவறாக பணம் மாற்றப்பட்டுவிடும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இது குறையக்கூடும்.
யூசர்கள் என்ன செய்ய வேண்டும்?
புதிய விதி விரைவில் அமலுக்கு வர உள்ளதால் டிஜிட்டல் பேமென்ட் யூசர்கள் அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- பேமென்ட்டை முடிப்பதற்கு முன் காட்டப்படும் பெயரை கவனமாக சரிபார்க்கவும். அது பழக்கமில்லாததாகவோ அல்லது சந்தேகத்திற்குரியதாகவோ தோன்றினால் தொடர வேண்டாம்.
- தெரியாத அல்லது நம்பத்தகாத சோர்ஸ்களில் இருந்து QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதைத் தவிர்க்கவும்; இவை மோசடி செய்பவர்களால் பயன்படுத்தப்படும் பொதுவான தந்திரமாகும்.
- ஏதேனும் அசாதாரணத்தை கண்டால் உடனடியாக உங்கள் வங்கி அல்லது கட்டணச் செயலியின் வாடிக்கையாளர் ஆதரவிற்கு புகாரளிக்கவும்.
நாட்டில் UPI பயன்பாடு அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது, மாதந்தோறும் 1300 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன. நாடு டிஜிட்டல் ரீதியாக தொடர்ந்து முன்னேறி வருவதால், டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான நம்பிக்கையை பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய திருத்தமாக NPCI-ன் சமீபத்திய இந்த விதி பார்க்கப்படுகிறது.
நீங்க UPI மூலம் பணம் செலுத்துபவரா…? ஜூன் 30ஆம் தேதி முதல் அமலாக உள்ள முக்கிய மாற்றம் இதுதான்…!

