Last Updated:
2024 உள்ளூரில் நடைபெற்ற கேரளாவுக்கு எதிரான போட்டியில் கம்போஜ் அந்த அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பிளே ஆப் சுற்றுகளைப் பொறுத்த அளவில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
சென்னை முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. ஐபிஎல் தொடருக்கு பின்னர் ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதற்கு முன்னதாக இந்தியா ஏ அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த அணியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜும் ஒருவர். அவர் சிறப்பாக விளையாடும் போது இந்திய அணியில் இடம் பிடிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கம்போஜ் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து முக்கிய விக்கெட்டான யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை இவர் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அன்ஷுல் கம்போஜ் குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கூறியதாவது, “கம்போஜ் 139 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். பந்து பேட்ஸ்மேன் கைகளை குறி வைத்து வீசப்படுகிறது. லென்த்தாக பந்து வீசுவது அவருடைய பலம். இங்கிலாந்து தொடரில் அவர் மிகச் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
தோனி கூறுகையில், “கம்போஜ் வீசுவது ஸ்விங் ஆகாது. ஆனால் பேட்ஸ்மேனை நெருங்கும்போது வந்து அதிக வேகத்தில் தாக்கும். அவரால் யார்க்கர்களையும் மிகச் சிறப்பாக வீச முடியும்” என்று தெரிவித்தார்.
2024 உள்ளூரில் நடைபெற்ற கேரளாவுக்கு எதிரான போட்டியில் கம்போஜ் அந்த அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
May 22, 2025 10:27 PM IST


