Last Updated:
Operation Sinthoor | பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டு ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலை இந்தியா சாதுர்யமாக கையாண்டு பல தாக்குதல்களை வெற்றிகரமாக நிகழ்த்தியது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்காக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை வாங்க செலவிடுவது தற்போது இன்னும் முக்கியத்துவம் பெற்றுள்ளதால் பாதுகாப்பு துறைக்காக இன்னும் கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. பாதுகாப்பு துறைக்காக துணை பட்ஜெட் மூலம் ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்குவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்படலாம். துணை பட்ஜெட் மூலம் வழங்கப்படும் இந்த கூடுதல் நிதி நாட்டிற்கான ஒட்டுமொத்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு ரூ.7 லட்சம் கோடியை தாண்டு என்றும் கூறப்படுகிறது.
கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம், ஆயுதப்படைகளின் தேவைகள், அத்தியாவசிய கொள்முதல்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2025/26 பட்ஜெட்டில் ஆயுதப்படைகளுக்கு ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.2024/25-ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.6.22 லட்சம் கோடியை விட இது அதிகமாகும்.
பிரதமர் மோடி முதன் முதலாக பொறுப்பேற்ற 2014-ஆம் ஆண்டு முதல் அவர் தலைமையிலான மத்திய அரசின் முக்கிய நோக்கமாக நாட்டின் பாதுகாப்பு உள்ளது. மத்திய பாஜக அரசின் முதல் ஆண்டான 2014/15 ஆம் ஆண்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.2.29 லட்சம் கோடி வழங்கப்பட்டது. பாதுகாப்பு துறைக்கான தற்போதைய நிதி ஒதுக்கீடு அனைத்து துறைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட மிக உயர்ந்தது மற்றும் மொத்த பட்ஜெட்டில் 13 சதவீதமாகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு பட்ஜெட் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 3 நாட்கள் நீடித்த இந்தியா-பாகிஸ்தான் ‘மோதலுக்கு’ பிறகு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்நாட்டில் அதிக அளவில் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதே நீண்டகால தீர்வு என்று குறிப்பிட்டுள்ளார். மற்ற நாடுகளிலிருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கினால், நாம் அதை அவுட்சோர்சிங் செய்து, நமது பாதுகாப்பை வேறொரு நாட்டின் கைகளில் விட்டுவிடுகிறோம் என்று அர்த்தம். இது நீண்டகால தீர்வாக இருக்க முடியாது என்பதே இவரது கருத்து.


