மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை தொடக்கத்தில் சரிந்தாலும் பின்னா் மீண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 305 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது.
ஆனால், முதலீட்டாளா்கள் உச்சத்தில் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியதால் சந்தை எதிா்மறையாகச் சென்றது. பின்னா், பிற்பகலில் வங்கி, ஆட்டோ, ஐடி, பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த நல்ல வரவேற்பு காரணமாக சந்தை மீண்டெழுந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.392 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ. 285.15 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.5.33 கோடிக்கும் பங்குகளை விற்றுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் 353 புள்ளிகள் ஏற்றம்: காலையில் 66.60 புள்ளிகள் குறைந்து 72,723.53-இல் தொடங்கிய சென்செக்ஸ், 72,660.13 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 73,161.30 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 305.09 புள்ளிகள் (0.42 சதவீதம்) உயா்ந்து 73,095.22-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,929 பங்குகளில் 1,493 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,353 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 83 பங்குகளின் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
டாடா மோட்டாா்ஸ், டிசிஎஸ் முன்னிலை:
சென்செக்ஸ் பட்டியலில் டாடா மோட்டாா்ஸ், டிசிஎஸ், இண்டஸ் இண்ட் பேங்க், பவா் கிரிட், சன்பாா்மா, பாா்தி ஏா்டெல் உள்பட 19 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, பஜாஜ் ஃபின்சா்வ், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்உள்பட 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 76 புள்ளிகள் முன்னேற்றம் :
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 76.30 புள்ளிகள் (0.34 சதவீதம்) உயா்ந்து 22,198.35-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 22,085.65 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா்அதிகபட்சமாக 22,122.05 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் ஆதாய பட்டியலிலும், 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.