Last Updated:
கர்நாடகாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற ரித்தேஷ் குமாரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
கர்நாடகாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். சாக்லேட் கொடுத்து சிறுமியை கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் யாதவாடா பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் இருந்தார். சிறுமியின் தாய் வீட்டு வேலை செய்பவராகவும், தந்தை ஓவியராகவும் வேலை செய்து வருகின்றனர். சிறுமியின் தாய் ஒரு வீட்டில் வேலை செய்வதற்காக சென்றபோது, தன்னுடன் சிறுமியையும் அழைத்து சென்று இருக்கிறார். சம்பவத்தன்று தாய் வீட்டிற்கு உள்ளே வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், சிறிது நேரம் கழித்து சிறுமியின் தாய் வெளியே வந்து பார்த்தபோது அங்கு சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகளை பல இடங்களில் தேடியபோது, வீட்டருகே பாழடைந்த வீட்டின் கழிவறையில் உடலில் காயங்களுடன் சிறுமி பிணமாக கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு தீவிர விசாரணையில் இறங்கினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமியை இளைஞர் ஒருவர் சாக்லெட் கொடுத்து கடத்தி செல்வது தெரியவந்தது.
சிறுமியை தூக்கி சென்ற இளைஞர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கிறார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரும் போராட்டங்களை நடத்த தொடங்கி விட்டனர். கொலைகாரனின் கொடும்பாவிகளை எரித்து அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். இளைஞர்கள் சிலர் கூடி குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்கக்கோரி சாலை மறியலும் செய்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை நேற்று மதியம் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர், பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த கூலி தொழிலாளி ரித்தேஷ் குமார் என்பது தெரியவந்தது. வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து, கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ரித்தேஷ் குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார், அவர் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி அசோக் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னப்பூர்ணா மற்றும் போலீசார், ரித்தேஷ் குமாரை அழைத்து கொண்டு அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்றனர். அங்கு வைத்து திடீரென்று கீழே கிடந்த கற்களை எடுத்து போலீசார் மீது வீசி ரித்தேஷ் குமார் தாக்குதல் நடத்தி தப்பி ஓட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னப்பூர்ணா, மற்றும் போலீசார் காயம் அடைந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் அன்னப்பூர்ணா தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தற்காப்புக்காக ரித்தேஷ் குமாரை நோக்கி இரண்டு முறை சுட்டு இருக்கிறார்.
இதில் ரித்தேஷ் குமாரின் மார்பில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கொலையும் செய்த நபரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
April 14, 2025 6:31 PM IST
பாழடைந்த வீட்டின் கழிவறையில் கிடந்த சிறுமியின் சடலம்.. சைக்கோ பாலியல் குற்றவாளி என்கவுன்டர் – போலீஸ் அதிரடி!


