மியாமி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது ஸ்பெயினின் மார்செல் கிரானோல்லர்ஸ், அர்ஜெண்டினாவின் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதி சுற்றில் போபண்ணா, எப்டன் ஜோடி குரோஷியாவின் இவான் டுடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் கிரஜி செக் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் ஏடிபி இரட்டையர் பிரிவு தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடிப்பதை உறுதி செய்துள்ளார் ரோகன் போபண்ணா.
கடந்த வாரம் துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் ரோகன் போபண்ணா ஜோடி கால் இறுதி சுற்றில் தோல்வி கண்டிருந்தது. இதனால் முதலிடத்தை இழந்து2-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தார். தற்போது அரை இறுதி சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் வரும் திங்கள் கிழமை புதுப்பித்து வெளியிடப்பட உள்ள ஏடிபி இரட்டையர் பிரிவு தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பதை போபண்ணா உறுதி செய்துள்ளார்.