Last Updated:
மண்பாண்ட பொருட்கள் வாங்குவது எப்படி என்பதைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் மண்பானை தொழிலாளி பாலமுருகன். அதனை பின்வருமாறு காணலாம்.
“பழக்கப்பழக்க மண்பாண்டத்தின் ருசி அதிகரிக்கும். மண்பானையில சமைச்சாதான் உணவோட உண்மையான ருசி தெரியும். அதை சாப்பிட்டுப் பார்த்தவங்களுக்கு அதோட அருமை புரியும். அந்த அளவிற்கு மண்பாண்டத்தில் சமைத்தால் உணவின் ருசி அதிகரித்து காணப்படும். மண்பாத்திரத்தில சமைக்கிற உணவு சீக்கிரமா கெட்டுப் போகாது. குறிப்பாக மண்பானையில வைக்கிற மீன் குழம்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. ஒரு வாரங்கூட கெட்டுப்போகாம இருக்கும். மத்த பாத்திரங்கள்ல வைக்குற உணவுப் பொருள்கள், வெயில்ல நீர்த்துப் போயிரும். ஆனா, மண்பானையோட தன்மையால அது நீர்த்துப் போகாது.
அந்த அளவிற்கு மண்பானையில் பல நன்மைகள் அடங்கியிருக்கிறது. தற்போது வளர்ந்து வரும் நவீன உலகத்தில் பலரும் பாரம்பரிய உணவு வகைகள், பாரம்பரிய பொருட்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் மண்பானைகளை எப்படி வாங்கலாம்? அதனை எப்படி பயன்படுத்தலாம் என விளக்கம் அளிக்கிறார் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மண்பானை தொழிலாளி பாலமுருகன்.
மண் சட்டியை கேஸ் அடுப்பில் வைப்பதால் ஒன்றும் ஆகாது. மண்சட்டி வாங்கும் போது, சட்டியின் அடி பாகம் தரையில் வைத்தால் ஆடாமல் இருக்கும் அப்படியாக உள்ள சட்டியை பார்த்து வாங்கவேண்டும். அடிப்பாகம் உருண்டையாக இருந்தால் கேஸ் அடுப்பில் வைக்கும் போது சாய்ந்துவிடுவதற்கு வாய்ப்பு உண்டு. அழகுக்காக இல்லாமல் மண் சட்டைகளை வாங்கும்போது சற்று, கனமாக இருக்கும் சட்டியாக இருந்தால் நன்று. எவ்வளவு மெலிதாக வாங்குகிறீர்களோ அவ்வளவு ஆபத்து இருக்கிறது. அதுபோல சாதம் வடித்து ஆக்கும் போது கொஞ்சம் கவனமாகவும் பொறுமையாகவும் வடிக்கவேண்டும்.
கண்டிப்பாக மண்பாண்ட பொருட்கள், வாங்கும்போது மண்பானையை தட்டிப் பார்த்து வாங்கவும், பானையை தட்டும் பொழுது நன்றாக சத்தம் வரவேண்டும். பானையில் கசிவு அல்லது ஓட்டைகள் இருந்தால் ஒரு வாளித் தண்ணீர் வைத்து அதில் மூழ்கி பார்க்கவும்.
அதுபோல புதிதாக வாங்கிய மண்பானையை சமையலுக்கு பயன்படுத்துவதற்கு முன்பாக, மண்பாண்ட பொருட்களில் சாதம் வடித்த கஞ்சியை முழுவதும் நிரப்பி, கொதிக்க வைத்து வைக்க வேண்டும். அதன் பிறகு மூன்றாவது நாளில், பானையை சமையலுக்கு பயன்படுத்தலாம். மண்பாண்ட பொருட்களில் சமைக்கும் போது அதிக எண்ணெய் தேவைப்படாது. இது இந்த பொருட்கள் லைப் லாங் வரைக்கும் வரும். இதில் சமைத்த உணவுகளை சாப்பிடும்போது டாக்டர் செலவு கூட மிச்சம் தான்” என விற்பனையாளர் பாலமுருகன் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 04, 2025 2:10 PM IST

