2015-ஆம் ஆண்டில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டியது. அதில், சர்வதேசத் தடைகளை நீக்குவதற்கு ஈடாக, தனது அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் ஒப்புக்கொண்டது.
2017-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், ஓராண்டில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். தற்போது மீண்டும் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் விதமான, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், அமெரிக்காவிடம் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் அந்நாட்டுடன் மறைமுகமான பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாகவும்
ஈரான் அதிபர் Masould Pezeshkian தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓமன் நாட்டின் உதவியுடன் அமெரிக்காவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அணு ஆயுத ஒப்பந்ததில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் அந்நாட்டின் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரித்துள்ளார். மேலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஈரான் மீது வர்த்தக வரி விதிக்கப்பட்டதை போன்று தற்போதும் இரண்டாம் கட்டமாக வரி விதிப்போம் என்றும் டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி வரும் நிலையில் சமீபத்தில் ஈரான், பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில் ஆயிரக்கணக்கான நவீன ஏவுகணைகள அந்நாட்டு ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ஈரானின் ராணுவப் பலத்தை காட்டும் விதமாக, 85 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ராணுவ தளபதி முகமது ஹுசைன் பகேரி மற்றும் விண்வெளிப் படைத் தலைவர் அமீர் அலி ஹாஜிசாதே, ஜீப்பில் சென்று பார்வையிடும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன என்பது குறிப்பிடதக்கது.
March 31, 2025 9:25 AM IST

