கிள்ளான், தாமான் ஸ்ரீ காடோங்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) இரவு 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று ஒற்றை மாடி வீடுகள் சேதமடைந்தன. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) உதவி செயல்பாட்டு இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து இரவு 11.09 மணிக்கு தனது துறைக்கு அழைப்பு வந்ததாகவும், கிள்ளான் சிலாடன், கிள்ளான் உத்தாரா, அண்டலாஸ் தீயணைப்பு மீட்பு நிலையங்களில் இருந்து 16 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், மூன்று தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தீ விபத்தில் ஒரே ஒரு வீடு மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும், 50 விழுக்காடு எரிந்து நாசமாகியதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மேலும் விசாரணையில் மூன்று வீடுகள் தீயில் கருகி இருப்பது உறுதி செய்யப்பட்டது – முதலாவது 50 விழுக்காடு, இரண்டாவது 20 விழுக்காடு, மூன்றாவது 15 விழுக்காடு எரிந்து நாசமானது என்று அவர் திங்கட்கிழமை (மார்ச் 31) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இரவு 11.45 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் மேலும் கூறினார். தீ விபத்துக்கான மொத்த இழப்புகள் மற்றும் காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.
The post தீயில் சேதமடைந்த 3 ஒற்றை மாடி வீடுகள்; கிள்ளானில் சம்பவம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

