புதுடெல்லி: கடந்த சில மாதங்களாக சர்வதேசஅளவில் பொருளாதார மந்தநிலைகாணப்பட்டு வந்த போதிலும்,ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்து வந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக ஐஎம்எஃப் செயல் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி வெங்கடசுப்ரமணியன் மேலும் கூறுகையில், “இந்தியா இதுவரையில் தொடர்ச்சியான அளவில் 8 சதவீத வளர்ச்சியை எட்டியதில்லை. ஆனால், அந்த வளர்ச்சி சாத்தியமானதே. கடந்த 10 ஆண்டுகளில்கொண்டுவரப்பட்டதுபோல் நல்லதிட்டங்களை மீண்டும் கொண்டுவந்தால் இந்தியாவால் 2047 வரை8 சதவீதம் வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைக்க முடியும்.
நாட்டின் மொத்த ஜிடிபியில் 58 சதவீதம் உள்நாட்டு நுகர்வு மூலமாக வருகிறது. இந்நிலையில் இந்தியா அதன் உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்புகளை அதிகம்உருவாக்குவதன் மூலம் மக்களின்நுகர்வை அதிகரிக்க முடியும். எனவே வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, உற்பத்தித் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். உற்பத்தித் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டுமென்றால், அதற்கு கடன் வழங்குவது சார்ந்து வங்கித் துறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.
நிலம், தொழிலாளர், முதலீடு,லாஜிஸ்டிக் உள்ளிட்டவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும்” என்றார்.