2013ம் ஆண்டு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடமிருந்து (LIC) ஜீவன் ஆரோக்கிய பாலிசியை வாங்கிய ஒருவர் தொடர்பான வழக்கு இது. தனது காப்பீடு விண்ணப்பத்தை நிரப்பும்போது, அவர் பல ஆண்டுகளாக அதிகமாக மது அருந்தி வந்ததை குறிப்பிடவில்லை. பாலிசியை வாங்கிய ஒரு வருடத்திற்குள், கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவரது மனைவி தனது கணவர் எடுத்த பாலிசியின் கீழ் மருத்துவச் செலவுகளுக்கான கோரிக்கையை தாக்கல் செய்தார். இருப்பினும், இறந்தவர் தனது குடிப்பழக்கத்தை வெளிப்படுத்தத் தவறியதை காரணம் காட்டி எல்.ஐ.சி. அவரது மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது.
“சுயமாக ஏற்படுத்திய நோய்கள்” மற்றும் “அதிகப்படியான மது அருந்துவதால் ஏற்படும் சிக்கல்கள்” ஆகியவற்றுக்கான காப்பீடு கோரிக்கையை தங்களின் பாலிசி வெளிப்படையாக விளக்குகிறது என்று காப்பீட்டாளர் வாதிட்டார். மேலும், இறந்துபோன நபர், தனக்கு குடிப்பழக்கம் இல்லை என்று தவறாக அறிவித்ததால், எல்.ஐ.சி. அந்தக் கோரிக்கை செல்லாது என்று கருதியது.
ஆரம்பத்தில், மாவட்ட நுகர்வோர் மன்றம் உயிரிழந்தவரின் மனைவிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, எல்.ஐ.சி ரூ.5.21 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அந்த நபரின் மரணம் கல்லீரல் தொடர்பான நோயால் அல்ல, மாறாக மாரடைப்பால் ஏற்பட்டது என்று வாதிட்டு மாநில மற்றும் தேசிய நுகர்வோர் ஆணையங்களும் இந்த முடிவை உறுதி செய்தன. இருப்பினும், எல்.ஐ.சி. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, இந்த விஷயத்தை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டுசென்றது.
இதையும் படிக்க: ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ, IDFC ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டுகளில் முக்கிய மாற்றங்கள்…!
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், நுகர்வோர் மன்றங்களின் தீர்ப்புகளை ரத்து செய்து, எல்ஐசிக்கு ஆதரவாக உத்தரவிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர், இது ஒரு நிலையான காப்பீட்டு பாலிசி அல்ல; மாறாக கடுமையான விதிமுறைகளைக் கொண்ட ஒரு சிறப்பு சுகாதார காப்பீட்டுத் திட்டம் என்று வலியுறுத்தினர்.
இறந்தவர் “நீண்ட கால குடிப்பழக்கத்தால்” பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், இந்த நிலை ஒரே இரவில் உருவாகியிருக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. பாலிசியை வாங்கும் நேரத்தில் இந்த உண்மையை அவர் வெளியிடத் தவறியது, அந்தக் கோரிக்கையை நிராகரிப்பதற்குப் போதுமான காரணமாகும். “மது அருந்துவது ஒரே இரவில் கல்லீரல் நோயை ஏற்படுத்தாது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டதோடு, இறந்தவர் பாலிசியை வாங்குவதற்கு முன்பே, அவரது குடிப்பழக்கம் ஒரு பிரச்சனையாக இருந்திருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டியது.
தவறான தகவல்களை அளித்ததன் அடிப்படையில் பாலிசிதாரரின் கோரிக்கையை எல்.ஐ.சி. நிராகரித்த முடிவை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி செய்தது. இருப்பினும், விதவையின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, எல்.ஐ.சி.யிடமிருந்து ஏற்கனவே பெற்ற ரூ.3 லட்சத்தை திருப்பித் தருமாறு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
March 28, 2025 4:21 PM IST
மது அருந்துவதை மறைத்தால் உங்கள் காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்படலாம்; உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன…?

