Last Updated:
சமாஜ்வாதி எம்பி ராம்ஜி லால் சுமன், ராணா சங்கா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததால், அவரது ஆக்ரா வீட்டில் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். பாஜக எம்பி ஜகதாம்பிகா பால் கண்டனம் தெரிவித்தார்.
சமாஜ்வாதி எம்பி ராம்ஜி லால் சுமன், சமீபத்தில் 16 ஆம் நூற்றாண்டின் ராஜபுத்திர மன்னரான ராணா சங்கா குறித்து தெரிவித்த கருத்து அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் உள்ள ராம்ஜி லால் சுமன் வீடு குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
ராம்ஜி லால் சுமன், “இந்திய முஸ்லிம்கள், பாபரை தங்கள் இலட்சியமாகக் கருதுவதில்லை. ஆனால், பாபரை இந்தியாவிற்கு அழைத்து வந்தவர் யார்? இப்ராஹிம் லோடியைத் தோற்கடிக்க அவரை அழைத்தவர் ராணா சங்காதான். முஸ்லிம்கள் பாபரின் சந்ததியினர் என்று நீங்கள் கூறினால், நீங்கள் ராணா சங்காவின் சந்ததியினர். ஆகையால் அவர், ஒரு துரோகி என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். நாங்கள் பாபரை விமர்சிக்கிறோம். ஆனால் ராணா சங்காவை அல்ல” என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்திற்கு அங்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு எழுந்துவந்தது. இந்நிலையில், இன்று அவரது வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல், அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்.. துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இதற்கு பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். அவர் இது குறித்து தெரிவித்தபோது, “கோடி கணக்கான மக்களின் உணர்வுகளை அவரது சொற்கள் புண்படுத்தியுள்ளது. அதிக மதிப்பு கொண்ட ஒருவரை பற்றி இப்படியான கருத்தை கூற எந்த மக்கள் பிரதிநிதிக்கும் உரிமை கிடையாது. அவரின் கருத்துக்கு, அவரது கட்சி எந்த வித நோட்டீஸும் அவருக்கு வழங்கவில்லை. எந்த நடவடிக்கையும் இல்லை. இவர்கள் தொடர்ந்து சனாதான தர்மத்தை எதிர்த்து கருத்து தெரிவிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய சமாஜ்வாதி எம்.எல்.ஏ. ரஞ்சித் சுமன், “கடந்த இரு தினங்களாகவே அவரது வீட்டை தாக்கப்போவதாக சமூகவலைதளங்களில் மிரட்டல்கள் வந்தன. இன்று கும்பலாக வந்து வீட்டை தாக்கியுள்ளனர்.
இது குறித்து இன்று பேசிய எம்.பி. ராம்ஜி லால் சுமன், “இப்ராஹிம் லோடியை தோற்கடிக்க பாபரை இந்தியாவுக்குள் அழைத்துவந்தவர் ராணா சாங்கா என நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்திருந்தேன். எந்த மதத்தினரின் நம்பிக்கையையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. எனக்கு மதத்தின் மீது நம்பிக்கை இருக்கவும் செய்யலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், ஒரு மதத்தை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இந்த மண்ணுக்காக உயிர் தியாகம் செய்த அனைத்து தியாகிகளையும் நான் வணங்குகிறேன்” எனத் தெரிவித்தார்.
March 26, 2025 8:11 PM IST


