பரேலி,உத்தர பிரதேசத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் லைக்குகளுக்காக பாகிஸ்தானை நேசிக்கிறேன் என பதிவிட்டு சிக்கலில் சிக்கியுள்ளார். இதுபற்றி இஜாத்நகர் காவல் நிலையத்தின் உயரதிகாரி விஜேந்திரா சிங் கூறும்போது, ஷிகார்பூர் சவுத்ரி கவுடியா பகுதியை சேர்ந்தவர் தப்ரீஸ் ஆலம்.
இவர், பேஸ்புக்கில் பாகிஸ்தானை நேசிக்கிறேன் என பதிவிட்டு உள்ளார். இந்த விவகாரம் ‘அகண்ட பாரத சங்கல்ப நாத் நகரி 25’ என்ற அமைப்பின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதுபற்றி அந்த அமைப்பு வெளியிட்ட எக்ஸ் பதிவில், குறிப்பிட்ட அந்த நபரின் பதிவானது, இந்தியாவின் ஒற்றுமையை சமரசம் செய்யும் வகையில் உள்ளது.
தப்ரீசுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது. இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், புதிய குற்றவியல் சட்டத்தின் 152-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என சிங் கூறினார்.
தப்ரீசுக்கு எதிராக இந்து சிறுமி ஒருவரை கடத்திய மற்றொரு வழக்கும் உள்ளது என சிங் கூறியுள்ளார். அந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரில், வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு அவருடைய மகள், தப்ரீசுடன் சென்று விட்டார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த நபர், சிறுமியை காசியாபாத்துக்கு அழைத்து சென்று, மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை தப்ரீஸ் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. சிறுமியை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.