Last Updated:
ஆர்சிபி-யின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த வெற்றி அந்த அணிக்கு புதிய ஊக்கத்தை கொடுத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸை ஆர்சிபி எளிதாக வென்றது.
18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக தொடங்கியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி, தொடக்கத்திலேயே விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் விக்கெட்டை பறிகொடுத்தது. அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து இணைந்த சுனில் நரேன் -கேப்டன் அஜிங்கியா ரஹானே அதிரடியாக ரன்கள் சேர்த்தது. இருவரும் 2-ஆவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
10 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நல்ல தொடக்கத்தை அடுத்து வந்த ஆட்டக்காரர்கள் பயன்படுத்த தவறினர். இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஆர்சிபி பவுலர்கள், கொல்கத்தாவின் ரன் குவிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் அஜிங்கியா ரஹானே 56 ரன்களும், சுனில் நரேன் 44 ரன்களும், இளம் வீரர் ரகுவன்ஷி 30 ரன்கள் எடுத்தனர். ஆர்சிபி தரப்பில் க்ருணல் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு, தொடக்க வீரர்கள் விராட் கோலி – பிலிப் சால்ட் இணை ராக்கெட் வேக தொடக்கத்தை கொடுத்தது. ஒவ்வொரு ஓவர்களிலும் பவுண்டரிகள் பறந்ததால் ஆர்சிபி அணி ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது.
31 பந்துகளை எதிர்கொண்ட பிலிப்ஸ் சால்ட் 2 சிக்சர், 9 பவுண்டரியுடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல், 10 ரன்களில் வெளியேற 16 பந்துகளில் கேப்டன் ரஜத் பட்டிதார் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
16.2 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி 177 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி 59 ரன்களும், லிவிங்ஸ்டோன் 15 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலமாக பாயிண்ட்ஸ் டேபிளில் ஆர்சிபி அணி உள்ளது. அந்த அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த வெற்றி அந்த அணிக்கு புதிய ஊக்கத்தை கொடுத்துள்ளது.
March 22, 2025 10:57 PM IST


