Last Updated:
Beeswax Dolls| தேன் அடையில் இருந்து வீணாகும் மெழுகில் விதவிதமான மெழுகு பொம்மைகள் தயாரித்து அசத்தி வருகிறார் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த இயற்கை விவசாயி.
தேனீப்பெட்டிகளைப் பயன்படுத்தி தேன் தயாரித்தும், தேன் அடையில் இருந்து வீணாகும் மெழுகில் விதவிதமான மெழுகு பொம்மைகள் தயாரித்து அசத்தி வருகிறார் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த இயற்கை விவசாயி விவேகானந்தன்.
இயற்கை விவசாயம் செய்து வரும் விவேகானந்தன், தனது தோட்டத்தில் தேனீப்பெட்டிகள் வைத்து தேனீக்களை வளர்த்து அதன் மூலம் தேன்களை விற்பனை செய்து வருகிறார். தேனீப்பெட்டிகள் கூடுதல் வருமானத்துக்காகவும், பயிர்களில் மகரந்த சேர்க்கைக்கு உதவவும், சுமார் 30-க்கும் மேற்பட்ட தேனீப்பெட்டிகளை வைத்துள்ளார். தேனீக்கள் வளர்க்க ரசாயனம்தான் முதல் எதிரி என்கிறார் இயற்கை விவசாயி விவேகானந்தன். சிலர் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, அதிக வீரியம் உள்ள ரசாயன பூச்சிக்கொல்லிகள் தெளிக்கின்றனர். இதனால், தோப்புகளில் இருந்து, இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் வருவது இல்லை. இதனால், பயிர்களில் மகரந்த சேர்க்கை பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
இயற்கை விவசாயம் செய்யும் தோப்புகளில் மட்டுமே, தேனீப்பெட்டிகள் வைக்க முடியும். ஒரு பெட்டி, 2,500 ரூபாய்க்கு சந்தையில் வாங்கி, தேனீக்கள் விடப்படுகிறது. முதல் நான்கு வாரங்களுக்கு, தேனீக்களுக்கு சர்க்கரை கரைசல் உணவாக வழங்கப்படுகிறது. தேனீக்களுக்கு வைரஸ் நோய்கள் தாக்காமல் இருக்க, சர்க்கரை கரைசலில், கீழாநெல்லி சாறு விடப்படுகிறது. ஒரு பெட்டியில் குறைந்தபட்சம், ஐந்து முதல் பத்து கிலோ தேன் கிடைக்கிறது எனவும், சந்தையில் ஒரு கிலோ தேன், 400 ரூபாய் வரையில் விற்பனை செய்து வருவதாகவும் கூறும் விவேகானந்தன் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் தெரிவிக்கிறார். ஆண்டு முழுவதும் தேன் விற்பனையில் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், தேன் வளர்ப்புக்குத் தேவையான பெட்டிகள், தேனீக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் விவேகானந்தன் தெரிவித்தார். தேனீக்கள் அடங்கிய ஒரு பெட்டி, 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதிப்பு கூட்டுப் பொருள் தேன் எடுத்தது போக மிச்சமாகும் மெழுகு, நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
வார்ப்புகளில் மெழுகை ஊற்றி, விநாயகர், சிவன், வெங்கடாசலபதி, ராமர், சாய்பாபா, போன்ற சாமி சிலைகளும், சோப்பு அழகு சாதனப் பொருட்கள், உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படுவதாகவும் பெருமிதம் தெரிவிக்கிறார். தேன் மெழுகில் செய்யப்படும் பொம்மை 100 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும், தேனீக்கள் வளர்ப்பில் நல்ல வருமானம் கிடைப்பதுடன், புதிய சந்தை வாய்ப்புகள் உருவாவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தேனீக்கள் பற்றிய கண்காட்சி எங்கே நடந்தாலும் அங்கு தேனீக்களைப் பற்றி பயிற்சி வகுப்புகளையும் தான் எடுத்து வருவதாக கோவை இயற்கை விவசாயி விவேகானந்தன் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 19, 2025 11:16 AM IST


