Last Updated:
Sunita Williams | விண்வெளியில் இருந்து விண்வெளி வீரர்கள் திரும்பும்போது, அவர்களின் உடல்கள் மீண்டும் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப சரி செய்ய முயற்சிக்கின்றன.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்புகின்றனர். இந்நிலையில், பூமியில் தரையிறங்கிய பிறகு, இருவரும் ஸ்ட்ரெச்சர்களில் வெளியே அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிகிறது. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
விண்வெளியில் 9 மாதங்களை கழித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை இவர்கள் பூமிக்கு திரும்புகிறார்கள். அப்போது, இரண்டு விண்வெளி வீரர்களும் ஒரு ஸ்ட்ரெச்சரில் நேராக வெளியே கொண்டு வரப்படுவார்கள். ஆனால், இது எந்த மருத்துவ அவசரநிலை காரணமாகவும் அல்ல. மாறாக, இது விண்வெளி பயணம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளின் ஒரு பகுதியாகும்.
விண்வெளியில் பல மாதங்களை கழித்ததால், விண்வெளி வீரர்களால் திடீரென்று நடக்க முடியாது. உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். இவை சமநிலை மற்றும் தசைகளை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. பூமியில், ஈர்ப்பு விசை நம் உடல்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால் விண்வெளியில் வீரர்கள் எடையற்றதாக உணர்கிறார்கள். அவர்களின் உடல்கள் அந்த சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுகின்றன.
Also Read: 900 மணிநேரம்.. 150+ ஆராய்ச்சிகள்.. விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸின் Crew9 செய்த சாதனைகள்!
நிபுணர்கள் கூறுவது என்ன?
“ஈர்ப்பு விசையின்மை வெஸ்டிபுலர் அமைப்பை பலவீனப்படுத்துகிறது,” என்று டெக்சாஸில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தின் நிபுணர் ஜான் டெவிட் லைவ் சயின்ஸிடம் கூறினார். மேலும், விண்வெளியில் இருந்து விண்வெளி வீரர்கள் திரும்பும்போது, அவர்களின் உடல்கள் மீண்டும் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப சரிசெய்ய முயற்சிக்கின்றன. இது தலைச்சுற்றல், பலவீனம் மற்றும் விண்வெளி இயக்க நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றார்.
விண்வெளியில் அதிக நேரம் செலவிடும் விண்வெளி வீரர்கள் தங்கள் தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்கிறார்கள். இருப்பினும், விண்வெளியில், உடல் நடக்கவோ, நிற்கவோ அல்லது ஈர்ப்பு விசையை எதிர்த்துப் போராடவோ தேவையில்லை. எனவே தசை மற்றும் எலும்பு இழப்பு ஏற்படுகிறது. “கடந்த ஒன்பது மாதங்களாக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம்,” என்று சுனிதா வில்லியம்ஸ் ஒரு மின்னஞ்சலில் தெரிவித்தார்.
March 18, 2025 10:25 AM IST
பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்படுவாரா? நிபுணர்கள் கூறுவது என்ன?


