பட மூலாதாரம், BBC World Service
லிபிய அகதிகள் படகு ( கோப்புப் படம்)
லிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி சுமார் 170 குடியேறிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று சீற்றமான அலை காரணமாக லிபியாவை அண்டிய கடற்பகுதியில் மூழ்கியுள்ளது.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
17 பேரை லிபிய கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடிவருகின்றனர்.
தலைநகர் திரிப்போலிக்கு கிழக்காகவுள்ள துறைமுகம் ஒன்றிலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் படகு பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது.
உடனடியாக மீனவர்கள் அதிகாரிகளுக்கு அறிவிக்க, மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தங்களிடம் போதுமான கருவிகள் இல்லையென்று கூறுகின்ற லிபிய கடலோரக் காவல்படையினர், மீட்புப் பணிகளுக்காக படகுகளை கடன்வாங்கும் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.