Last Updated:
பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவுக்குள் வரும் வெளிநாட்டினர் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என ஜனவரி 20 ஆம் தேதி அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்
பாகிஸ்தான், பூடான் உள்பட 41 நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்ட விரோதமாக அமெரிக்காவில் பிற நாட்டவர் குடி பெயர்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் முதன் முறையாக பதவி வகித்தபோது சட்டவிரோத குடி பெயர்தலை தடுப்பதற்கு பல அதிரடி நடவடிக்கைகளை செய்திருந்தார். இதற்காக மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட தடுப்புச் சுவர் எழுப்பப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
தற்போது 2 ஆவது முறையாக ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர், வெளிநாட்டவர்களுக்கு கட்டுப்பாட்டை விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பாகிஸ்தான், பூடான் உள்பட 41 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 41 நாட்டினர் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் பிரிவில் ஆப்கன், சிரியா, ஈரான், கியூபா, வடகொரியா என 10 நாட்டினர் உள்ளனர். இவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவது முற்றிலும் தடை செய்யப்படவுள்ளது.
2 ஆவது பிரிவில் எரித்ரியா, ஹைதி, லாவோஸ், மியான்மர் மற்றும் தெற்கு சூடான் உள்ளது. இந்த நாட்டை சேர்ந்தவர்களின் விசாவுக்கு பகுதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. இதனால் மாணவர்கள், சற்றுலா பயணிகள் பாதிக்கப்படலாம்.
3 ஆவது பிரிவில் பாகிஸ்தான், பூடான், மியான்மர் உள்ளிட்ட 26 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் விசா பெற விண்ணப்பித்து அதை சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த விசா விண்ணப்பங்களை அமெரிக்கா பரிசீலிக்காது.
இந்த நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ள நிலையில் விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை தி நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. ட்ரம்ப் முதன் முறையாக அதிபராக இருந்தபோது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவுக்குள் வரும் வெளிநாட்டினர் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என ஜனவரி 20 ஆம் தேதி அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக 41 நாடுகளுக்கு விசா முழுமையாக அல்லது சில தளர்வுகளுடன் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
March 15, 2025 4:17 PM IST
பாகிஸ்தான், பூடான் உள்பட 41 நாடுகளுக்கு விசா கட்டுப்பாடு.. ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை