1999-ல் சச்சின் தலைமையில் ஆஸ்திரேலியா சென்று அங்கு 0-3 என்று ஒயிட் வாஷ் வாங்கி வந்து பிறகு இங்கு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக குழிப் பிட்சைக் கேட்டு வாங்கி சாதாரண ஸ்பின்னர் நிக்கி போயேவிடம் மடிந்து தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்று உதை வாங்கி, அதன் பிறகான ஒருநாள் தொடர் மேட்ச் பிக்சிங் சூதாட்ட பங்கமாகி இந்திய அணியே நிலைகுலைந்த தருணத்தில்தான் கங்குலி கேப்டன் ஆனார்.
2000-ல் கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட, டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 போட்டிகளில் தோல்வி கண்ட இந்திய அணி 2001-ல் ஸ்டீவ் வாஹ் தலைமையில் வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று அதிக டெஸ்ட் போட்டிகளை தொடர்ச்சியாக வெல்லும் சாதனை விளிம்பில் ஆஸ்திரேலியா அணி கொல்கத்தா வந்தது.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 269/8-இருந்து ஸ்டீவ் வாஹின் அட்டகாசமான சதம் மற்றும் ஜேசன் கில்லஸ்பியின் 46 ரன்களுடன் 445 ரன்களை எடுத்தது. ஹர்பஜன் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய அணி 171 ரன்களில் ஆல் அவுட். சச்சின் டெண்டுல்கர் 10 ரன்களில் மெக்ரா பந்தில் எல்.பி.ஆகி கொல்கத்தா ரசிகர்களின் நெஞ்சைப் பிளந்தார். லஷ்மண் தான் அதிகபட்சமாக 59 ரன்கள எடுத்தார். ஸ்டீவ் வாஹ் என்ன நினைத்தாரோ, அதி தன்னம்பிக்கையா, அல்லது இந்திய அணி அப்போது ஒன்றுமில்லை என்ற நிலையா? முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற நம்பிக்கையா, மெக்ரா, வார்ன், கில்லஸ்பி இருக்கும் பெரிய தைரியமா? எது என்று தெரியவில்லை, ஃபாலோ ஆன் என்று கங்குலியிடம் சொன்னார்.
இந்திய அணி சச்சின் 2-வது இன்னிங்சிலும் 10 ரன்களில் அவுட். கொல்கத்தா ரசிகர்களின் வரலாற்றுக் கோபம் உள்ளுக்குள்ளே கனன்று கொண்டிருந்தது. 232/4 என்ற நிலைமையில் லஷ்மணை கங்குலி முன்னமேயே 3ம் நிலையில் இறக்கினார், அவர் களத்தில் இருந்தார், இது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆக அமைந்தது, ஏனெனில் முதல் இன்னிங்சில் லஷ்மண் 3ம் நிலையில் இறங்கவில்லை. திராவிட் தான் இறங்கினார், திராவிட் செம தடவலாக ஆடியதால் அவரை 6ம் நிலைக்குத் தள்ளினார் கங்குலி.
இதுதான் பெரிய கை கொடுத்த மூவ் ஆனது. 232/4 என்ற நிலையில் இந்திய அணி மைனஸ் 42 ரன்கள். இந்திய அணி தோல்வியின் பிடியில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வெற்றியின் அருகில் குதூகுலத்துடன் வெற்றி முகங்களுடன் காத்துக் கொண்டிருந்தது.
அதன் பிறகு நடந்தது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் மைல்கல், அசாதாரணம். சப்லைம் என்று ஆங்கிலத்தில் சொல்வோமே அத்தகைய உன்னதம். லஷ்மண் ஏற்கெனவே 109 ரன்களை எட்டியிருந்தார். அவரும் ராகுல் திராவிடும் ஆடிய ஆட்டத்தில் அன்றைய தினமான இன்றைய தினத்தில் அல்லது இன்றைய தினமான அன்றைய தினத்தில் லஷ்மண் 275 நாட் அவுட். ராகுல் திராவிட் 155. திராவிட் இன்னிங்ஸே தெரியாத அளவுக்கு லஷ்மண் இன்னிங்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சமான சப்லைம் இன்னிங்ஸ் ஆக அமைந்தது.
லஷ்மண் 281, ராகுல் திராவிட் 180 மொத்தம் 178 ஓவர்கள் ஆடி 657/7 டிக்ளேர். லஷ்மண் தன் 281 ரன்களில் 44 பவுண்டரிகள் என்று 176 ரன்களை பவுண்டரிகளிலேயே அடித்தது அப்போது ஒரு அரிய சாதனையே. ஆஸ்திரேலிய அணியில் ஆடம் கில்கிறிஸ்ட், ஸ்டீவ் வாஹ் மட்டுமே பந்து வீசவில்லை மற்றபடி 9 பவுலர்கள் வீசினர். லஷ்மண், திராவிட்டை அசைக்க முடியவில்லை
384 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆஸ்திரேலியா 74/0 என்று அட்டகாசமாகவே ஆடினர். ஆனால் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளைச் சாய்க்க, , சச்சின் டெண்டுல்கரின் முக்கியமான 3 விக்கெட்டுகள் 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை மடியச் செய்து அட்டகாசமான ஒரு அசாதாரண வெற்றியை இந்திய அணி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்து பிறகு சென்னையில் இதே போன்ற ஒரு விறுவிறுப்பான டெஸ்ட்டில் வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அன்றைய தினம் தான் பார்டர்-கவாஸ்கர் டிராபி ஆஷஸை விடவும் முக்கியமான தொடரானது, இந்திய அணியை உலக டெஸ்ட் நாடுகள் மதிக்கத் தொடங்கியதோடு அச்சப்படவும் தொடங்கின. இந்த திருப்பு முனை நாளை மறக்க முடியுமா? இது இன்று வரை லஷ்மண் மேட்ச் என்றே பிரபலமாகியுள்ளதோடு, கிரிக்கெட்டில் ஆஷசை முறியடித்து ஆஸ்திரேலியாவின் புதிய வைரிகளாக இந்திய அணி உருவெடுத்த நாள் இதுவே.