Last Updated:
Holi 2025 : வண்ணங்களின் திருவிழாவான கோலி, வடமாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முதல் நாளில் மகா விஷ்ணுவின் பக்தனான பிரகலாதனை கொல்லும் முயற்சியில் அசுர குலத்தை சேர்ந்த ஹோலிகா நெருப்பில் எரிந்து மாண்டுபோனதை குறிக்கும் வகையில் ஹோலிகா தகனம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
அதன்படி, நேற்று ஹோலிகா தகனம் நிகழ்ச்சி வட மாநில மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் வொர்லியில் ஹோலிகா உருவ பொம்மையை தீயிட்டு எரித்து இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடியை தூவி நடனமாடி மகிழ்ந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மகாகாளேஸ்வர் கோயிலில் நேற்றிரவு மரக்கட்டைகளுக்கு மத்தியில் ஹோலிகா உருவ பொம்மையை வைத்து எரியூட்டி, அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்பட்டது. இதேபோன்று ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் சிஆர்பிஎப் படை வீரர்கள் ஹோலிகா தகனம் நிகழ்ச்சியை விமர்சையாகக் கொண்டாடினர்.
பல இடங்களில் நேற்று ஹோலி கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரேதச மாநிலம் அயோத்தியில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ந்தனர். ஹிமாச்சல பிரதேச மாநிலம் மாண்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் திரண்டு ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரிலும் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஒரு சில இடங்களில் நாளை கொண்டாடப்பட்ட உள்ளது.இதனால், ஹோலி பண்டிகையையொட்டி நாளை நடைபெறும் இந்தி தேர்வை எழுத முடியாத 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
March 14, 2025 7:59 AM IST