இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் 2023ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூடினார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக மன்னருக்கான பணிகளில் ஈடுபட்டுவந்த நிலையில், புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் மூன்றாம் சார்லஸ் பாதிக்கப்பட்டார்.
50 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் எனும் நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் எனினும், தூக்கமின்மை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், சிறுநீர் குழாயில் வலி, எரிச்சல் போன்றவற்றால் மன்னர் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து, மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக ஜனவரி 17ஆம் தேதி பக்கிங்காம் அரண்மனை அறிவித்தது.
இதற்கிடையே, இளவரசர் வில்லியம்மின் மனைவி கேட் மிடில்டன், வயிற்றில் கட்டி ஏற்பட்டு, ‘தி லண்டன் க்ளினிக்’ என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனைக்கு சென்று கேட் மிடில்டனை சந்தித்து நலம் விசாரித்த மன்னர் சார்லஸ், அதே மருத்துவமனையில் ஜனவரி 26ஆம்தேதி அனுமதிக்கப்பட்டார். 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மன்னர் நலமுடன் உள்ளதாக ராணி கமீலா தெரிவித்தார்.
ஆனால், மன்னருக்கு புரோஸ்டேட் தவிர்த்த வேறு வகையான புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி அதிர்ச்சி அளித்தனர் மருத்துவர்கள்..
அதைத் தொடர்ந்து பிப்ரவரி 5ஆம் தேதி முதல் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.
மன்னர் 3ஆம் சார்லஸ் வீடு திரும்பிய போதே பொது நிகழ்ச்சிகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், ராணி கமீலாவுடன் ஞாயிற்றுக்கிழமை தேவாலய வழிபாட்டில் பங்கேற்றார் சார்லஸ்.
விரைவில் பொது வாழ்வுக்கும் திரும்புவார் என பக்கிங்காம் அரண்மனை கூறிய நிலையில், ராணி கமீலா, இளவரசர் வில்லியம், இளவரசர் எட்வர்ட் ஆகியோர் உதவியுடன் அரண்மனையில் இருந்தவாறு அலுவலக பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மன்னர் சார்லஸ்-க்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பலரும் நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை நம்பிக்கையோடு பொதுவெளியில் அறிவித்து, அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் மன்னர் என்று ராயல் சொசைட்டி ஆஃப் மெடிசின் அமைப்பு மன்னரை புகழ்ந்துரைத்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள இருவரில் ஒருவர், தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை எதிர்கொள்வதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கும் நிலையில், மன்னர் சார்லஸுக்கு பிறகு யார் மன்னர் பொறுப்புக்கு வருவது என்கிற ரேஞ்சுக்கு ஒரு பக்கம் விவாதிக்கப்படுவது மன்னரின் குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
எதிர்காலம் குறித்த முன்கணிப்பாளர் நாஸ்ட்ரடாமஸ், தனது புத்தகத்தில் “தீவுகளின் மன்னர், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவரால் பதவி பறிக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளதாக கூறி பலரும் பேசிவருவதும் கட்டுத்தரி இல்லாத காட்டுக்குதிரையாக காற்றில் பறக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…