சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் சேவை
மேலும், சென்னை மெட்ரோ இரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திலுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான 15.46 கி.மீ. தூரத்திற்கு 9,335 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரையிலான 21.76 கி.மீ. தூரத்திற்கு 9,744 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் பூந்தமல்லியில் இருந்து திருப்பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையிலான 27.9 கி.மீ. தூரத்திற்கு 8,779 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் நீட்டித்திடும் வகையில், விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இவ்விரிவான திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசின் மூலதனப் பங்களிப்பினைப் பெறுவதற்காக விரைவில் அனுப்பப்படும். தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தூரத்திற்கும். கலங்கரை விளக்கத்திலிருந்து உயர் நீதிமன்றம் வரை 6 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ இரயில் வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.