குவெட்டா,பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சி குழுக்களை சேர்ந்தவர்கள் பலுசிஸ்தானை தனிநாடாக அறிவிக்கக்கோரி அரசுக்கு எதிராக தொடர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக பாகிஸ்தான் அரசால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ.) சமீபகாலமாக பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் இருந்து கைபர்பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவருக்கு நேற்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டது. 9 பெட்டிகளை கொண்ட ரெயிலில் சுமார் 500 பயணிகள் இருந்தனர்.
பலுசிஸ்தானின் போலன் மாவட்டத்தில் குடாலார் மற்றும் பிறுகோனேரி நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் சிலர் ரெயில் டிரைவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் டிரைவர் காயமடைந்ததை அடுத்து, ரெயில் ஆள்அரவமற்ற பகுதியில் நின்றது. அதன் பின்னர் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டவாறு ரெயிலில் ஏறினர். பின்னர் ரெயிலில் பயணம் செய்த பாதுகாப்பு படையினர் உள்பட 440 பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.
இதனையடுத்து 2 நாட்களாக பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திய சண்டை நேற்று மாலை முடிவுக்கு வந்தது. 346 பிணைக்கைதிகளும் மீட்கப்பட்டனர் என்றும், 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 21 பயணிகள், 4 பாதுகாப்பு படையினரை பயங்கரவாதிகள் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. சுமார் 30 மணி நேரம் கடுமையாக போராடி பயங்கரவாதிகளிடம் இருந்து பிணைக்கைதிகளை பாகிஸ்தான் ராணுவம் பத்திரமாக மீட்டது. ரெயில் கடத்தப்பட்டதுமே நடவடிக்கையில் ராணுவம் களம் இறங்கியது. ஆனால் ரெயில் கடத்தப்பட்ட இடம் மலைப்பகுதி என்பதாலும், பயணிகளை பயங்கரவாதிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தியதாலும் மீட்பு பணியை கவனமாக மேற்கொண்டனர். இதில் பாகிஸ்தான் ராணுவம் சிறப்பு சேவை படை, விமானப்படை, ஆகியவை ஈடுபட்டன. இதில் பிணைக்கைதிகள் ஒவ்வொரு குழுவாக மீட்கப்பட்டனர்.
ரெயிலை கடத்திய பயங்கரவாதிகளிடம் இருந்து பயணிகளை மீட்டது எப்படி? என்று ராணுவத்தின் கடைசி திக் திக் அனுபவத்தை கூறியுள்ளார் ராணவ செய்தி தொடர்பாளர் அகமது ஷெரிப். இது குறித்து அவர் கூறியதாவது:-
பிணைக்கைதிகளை மனித கேடயங்களாக பயங்கரவாதிகள் பயன்படுத்தினர். இதனால் அவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு அதிக நேரம் ஆனது. முதலில் ரெயிலில் தற்கொலைப்படை பயங்கரவாதிகளை துப்பாக்கி சுடும் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். பின்னர் ஒவ்வொரு ரெயில் பெட்டியிலும் ஏறி பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டனர். இந்த நடவடிக்கையின்போது பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகளை தவிர பயங்கரவாதிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தியதால் இந்த நடவடிக்கை மிகவும் துல்லியமாகவும் எச்சரிக்கையுடனும் நடத்தப்பட்டது.
பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள கூட்டாளிகளுடன் செயற்கைகோள் தொலைபேசிகள் மூலம் தொடர்பில் இருந்தனர். ரெயில் கடத்தப்பட்ட சில பயணிகள் அங்கிருந்து தப்பி வெவ்வேறு திசைகளில் ஓடி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. பயங்கரவாதிகளும் அவர்களுக்கு உதவியர்களும் எங்கிருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என்றார்.