மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரில் உள்ள தாய்ப்பால் வங்கியால் இதுவரை 3,800 பச்சிளம் குழந்தைகள் பயன் அடைந்து உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “ அகோலா நகரில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. மாவட்ட பெண்கள் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட இந்த தாய்ப்பால் வங்கியின் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 3,816 பச்சிளம் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
வாசிம், புல்தானா உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த மாவட்ட பெண்கள் மருத்துவமனையில் குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட போதிலும், அவர்கள் அனைவராலும் பிறந்த குழந்தைக்கு பாலூட்ட முடிவதில்லை. உடல் உபாதைகள், பவீனம் உள்ளிட்ட ஏராளமான மருத்துவ காரணங்களால் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த குறையைப் போக்குவதற்காக 2021-ல் உருவாக்கப்பட்ட யசோதா மதர் மில்க் பேங்க் மூலமாக ஏராளமான குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வங்கி தொடங்கியது முதல் இதுவரையில் 3,612 பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளனர். மொத்தமாக பெறப்பட்ட 714 லிட்டரில் 708 லிட்டர் தாய்ப்பால் 3,816 பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றனர்.