கேரளத் தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா்.
‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும் இக்கோயிலில் பொங்கல் விழா கடந்த 5ஆம் தேதி அம்மனுக்கு காப்புக்கட்டி குடியிருத்தலுடன் தொடங்கியது.
இந்நிலையில், 9ஆம் நாளான வியாழக்கிழமை பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, காலையில் கோயில் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன் பட்டத்திரிபாடு தலைமையில் கோயில் மேல்சாந்தி முரளீதரன் நம்பூதிரி கோயிலிலிருந்து தீபம் எடுத்துவந்து திடப்பள்ளியில் உள்ள பொங்காலை அடுப்பைப் பற்றவைத்தாா். பின்னா், கோயில் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பு பற்றவைக்கப்பட்டது.
தொடா்ந்து, ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து, கோயிலைச் சுற்றி 4 கி.மீ. பகுதியில் சாலையோரமும், வீடுகளின் முன்பகுதிகளிலும் திரண்டிருந்த பெண்கள் பொங்கலிட்டனா். இதனால், திருவனந்தபுரம் நகரம் விழாக் கோலத்துடனும், புகைமூட்டத்துடன் காட்சியளித்தது.
விழாவில், கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனா். பிற்பகலில் பொங்கல் பானைகளில் புனிதநீா் தெளித்து நைவேத்யம் செய்யப்பட்டது.
பொங்கல் விழாவை முன்னிட்டு, பக்தா்களின் வசதிக்காக திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோவில், எா்ணாகுளம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதுடன், கூடுதல் நிறுத்தங்களும் அனுமதிக்கப்பட்டன. கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோவில், கேரளத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கடந்த ஆண்டைப்போலவே நிகழாண்டும் சுமாா் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டதாக, கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
