Last Updated:
யமுனை நதியில் சோனியா விஹார் – ஜகத்பூர் பகுதியில் படகு சவாரி சேவையை அறிமுகப்படுத்த மத்திய – மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.
டெல்லி யமுனை நதியில் விரைவில் படகு சவாரி அனுபவிக்கலாம்! டெல்லி மக்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் விதமாக யமுனை நதியில் 4 கிலோ மீட்டர் நீளமுள்ள சோனியா விஹார் – ஜகத்பூர் பகுதியில் படகு சவாரி சேவையை அறிமுகப்படுத்த மத்திய – மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது. இந்த திட்டம் டெல்லியின் காற்று மாசுபாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும். மேலும், சாலை நெரிசலைக் குறைத்து பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் யமுனை படித்துறைகள், வாரணாசியைப் போலவே கலை மற்றும் கலாச்சார மையமாக உருவாகும் என்று டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார். யமுனை நதியை சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இத்திட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சூரிய மின்சாரத்தில் இயங்கும் படகுகள் பயன்படுத்தப்படும். யமுனையில் படகு சவாரி சேவையை விரிவுபடுத்தும் விதமாக பொது – தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்துவதையும் அரசு பரிசீலித்து வருகிறது.
இதையும் படிக்க: பொது இடங்களில் பான் மசாலா துப்புபவர்கள் மீது நடவடிக்கை.. மேற்கு வங்கம் அரசு அதிரடி அறிவிப்பு
இந்த முயற்சி டெல்லிக்கு புதிய மற்றும் நவீன அடையாளத்தை வழங்குவதோடு தூய்மை மற்றும் மேம்பாட்டிற்கும் உதவும் என்று ரேகா குப்தா தெரிவித்தார். புதிய சார்ஜிங் நிலையங்கள் மற்றும் பிற வசதிகளும் உருவாக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்தார். இதுவரை யமுனை நதியை சுத்தம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட அவர், புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
March 13, 2025 6:29 PM IST
சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் முயற்சி… டெல்லியில் விரைவில் படகு சவாரியை அறிமுகப்படுத்த அரசு திட்டம்…!