Last Updated:
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதனை ரசிகர்கள் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த விருந்தாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கு 10 அணிகளும் தயாராகி வருகின்றன. தற்போது ஒவ்வொரு அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான சையத் அபித் அலி உயிரிழந்துள்ளார். அவர் தனது 83 வது வயதில் அமெரிக்காவில் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1967 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவர் அறிமுகமானார். தனது முதல் இன்னிங்ஸில் சையத் அபித் அலி 55 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி பலரையும் ஆச்சரியப்படுத்தினார். அவர் விளையாடிய காலத்தில் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும், சிறந்த பீல்டராகவும் இருந்து வந்துள்ளார்.
மன்சூர் அலிகான் பட்டோடி, ஜெயசிம்ஹா உள்ளிட்ட வீரர்களுடன் இவர் விளையாடி இருக்கிறார். 29 போட்டிகளில் விளையாடியுள்ள சையத் அபித் 1018 ரன்களும் 47 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
சையத் அபித் அலி
உள்ளூர் போட்டிகளைப் பொறுத்த அளவில் அபித் அலி 212 போட்டிகளில் விளையாடி 8,732 ரன்களும் 397 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அவரது மறைவு குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
March 13, 2025 4:41 PM IST