Last Updated:
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை எதிர்த்து திமுக எம்.பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என கூறியதற்காக அவர் வருத்தம் தெரிவித்தார்.
பி.எம். ஸ்ரீ பள்ளி திட்டத்தில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதைக் கண்டித்து மக்களவையில் திமுக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கியது. சாம்பியன்ஸ் கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இரு அவைகளிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மக்களவையில் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்க மறுக்கப்பட்டது குறித்துப் பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், “மத்திய அரசின் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக நிதி விடுவிக்காததை ஏற்க முடியாது” என்று கூறினார். மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கடுமையாக சாடினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கர்நாடகா உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூட ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறினார். ஆனால், தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டதாகவும் விமர்சித்தார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கம் எழுப்பிய திமுக எம்.பி.க்களை இருக்கைக்கு செல்லும்படி சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக எம்.பிக்கள் தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்ப்பதாகவும், மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என்றும் கூறினார்.
தொடர்ந்து மத்திய அமைச்சரின் பேச்சைக் கண்டித்து திமுக எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். “தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்காதே” என தமிழிலும் முழக்கம் எழுப்பினர். தமிழ்நாடு எம்.பிக்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். தனது கருத்து வருத்தமளித்தால் அதனை திரும்பப் பெறுவதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 10, 2025 1:21 PM IST
தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என விமர்சித்த மத்திய அமைச்சர்.. மக்களவையில் கடும் அமளி!