Last Updated:
மொரீசியஸ் தங்களுக்கு ஒரு நட்பு நாடு மட்டும் அல்ல எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தாங்கள் ஒரு குடும்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் மொரீசியஸுக்கும் இடையிலான நட்பு, நம்பிக்கையின் பிணைப்பாக விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இருநாள் பயணமாக மொரீசியஸ் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரைச் சந்தித்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை அடுத்து, இந்தியாவுக்கான வெளிநாட்டுக் குடிமகன் அட்டைகளை பிரதமர் ராம்கூலம் மற்றும் அவரது மனைவி மீனாவுக்கு பிரதமர் வழங்கினார். அதேபோல மொரீசியஸ் அதிபருக்கு மகா கும்பமேளா புனித நீரையும், பிகாரில் தயாரிக்கப்பட்ட சத்துணவையும் அவருக்கு பிரதமர் மோடி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, மொரீசியஸில் வசித்து வரும் இந்திய மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இருநாடுகளுக்கு இடையேயான இணக்கமான உறவை விவரித்தார். மொரீசியஸ் செழிக்கும்போது, அதைக் கொண்டாடுவது இந்தியாதான் எனக் கூறினார். கொரோனா பாதிப்பின்போது மொரீசியஸ் நாட்டுக்கு முதல் நாடாக தடுப்பு மருந்தை அனுப்பியதும் இந்தியாதான் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மொரீசியஸ் தங்களுக்கு ஒரு நட்பு நாடு மட்டும் அல்ல எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தாங்கள் ஒரு குடும்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மொரீசியஸ் மக்களுக்கு தேசிய தின வாழ்த்தையும் தனது உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதை அடுத்து, மொரீசியஸ் நாட்டின் உயரிய விருதான ‘The Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean’ பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
March 12, 2025 7:24 AM IST