ஹரித்துவார்,உத்தரகாண்டின் ஹரித்துவார் நகரில் வசித்து வரும் 20 வயது பெண், இரட்டை குழந்தைகளான அவருடைய 6 மாத மகள்களை மூச்சு திணற செய்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அந்த பெண்ணின் கணவர் ஹரித்துவார் நகரில் ஜ்வாலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், குழந்தைகள் சுயநினைவின்றி உள்ளனர் என கணவரிடம் அந்த பெண் கூறியுள்ளார்.
இதில் ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில் அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு திரும்பி வந்தபோது, அந்த 2 குழந்தைகளும் சுயநினைவின்றி கிடந்தன. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, உயிரிழந்து விட்டன என டாக்டர்கள் கூறி விட்டனர் என்றார்.
எனினும்,போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தைகளை கொலை செய்த விவரங்களை வெளியிட்டார். அவர் போலீசாரிடம், அடிக்கடி குழந்தைகள் இரவு நேரத்தில் அழும். இதனால், சரியாக தூங்க முடியவில்லை.
அவர்களின் அழுகையை நிறுத்த முடிந்த வரை முயன்றேன். ஆனால் அதில் பலனில்லை. இதனால், அதிருப்தி ஏற்பட்டது. அதனால், வாயில் துணியை வைத்து அழுத்தியதில், மூச்சு திணறி உயிரிழந்து விட்டன என அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார். அந்த குழந்தைகளின் பிரேத பரிசோதனை முடிவில், அவை மூச்சு திணறி உயிரிழந்த விவரம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.