Last Updated:
“கனிமொழி எனக்கு சகோதரி; நான் தவறாக பேசி இருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் நேற்று, தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதி குறித்து கேள்வி எழுப்பி மத்திய அரசை கடுமையாக சாடினார்.
இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக எம்.பிக்களை “நாகரிகமற்றவர்கள்” என்று கூறினார். இதற்கு திமுக உள்ளிட்ட தமிழ்நாடு எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது சொற்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
மத்திய அமைச்சரின் சொல் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்றே கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கனிமொழி எம்பி நேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார். இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “கனிமொழி எனக்கு சகோதரி; நான் தவறாக பேசி இருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன். 100 முறை மன்னிப்பு கேட்க தயார்” எனத் தெரிவித்துள்ளார்.
March 11, 2025 8:10 PM IST


