Last Updated:
கடைசியாக நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 6 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாததால், போட்டியை நடத்தும் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதான நிர்வாகத்திற்கு சுமார் ரூ. 45 கோடி வரை இழப்பு ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றாக இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானம் உள்ளது.
இந்த நிலையில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாததால், 4 மில்லியன் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 45 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘தி டைம்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலில், இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என்கிற நம்பிக்கையில், போட்டியை நடத்துபவர்கள் பிரீமியம் டிக்கெட்டுகளுக்கான விலையை அதிகப்படுத்தி உள்ளனர். ஏனென்றால், இந்தியா பங்கேற்கும் போட்டிகளுக்கு டிக்கெட் கிடைப்பது டிமாண்டாக இருக்கும்.
ஆனால், இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்காததால் லார்ட்ஸ் மைதானத்தை நிர்வகிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்-க்கு நிதி இழப்பு ஏற்படும். கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அளவில் நிதி செல்வாக்கு உடையவர்களாக இந்திய அணி உள்ளது என்று கூறியுள்ளது.
மேலும், இந்தியா பங்கேற்காததால் டிக்கெட்டின் விலை குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி, மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியாக நடைபெற்ற 8 போட்டிகளில் இந்திய அணி 6 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
குறிப்பாக, நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்ளூரில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இதனால் புள்ளிகள் பட்டியலில் குறைந்த இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
March 11, 2025 8:06 PM IST


