Last Updated:
ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் அனுபவ வீரர் டேரில் மிட்செல் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 101 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்து 63 ரன்களில் வெளியேறினார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இந்த நிலையில் இறுதிப் போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் நிதானமாகவும் பின்னர் வேகமாகவும் ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
சுழற்பந்து வீச்சை இந்தியா கையில் எடுத்ததும் ஆட்டம் முழுவதுமாக இந்திய பவுலர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் வில் யங் 15 ரன்களும், ரச்சின் ரவிந்திரா 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சீனியர் வீரர் கேன் வில்லியம்சன் 11 ரன்களில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் டாம் லாதம் 14 ரன்கள் எடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் அதிரடியாக விளையாட நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தயங்கினர். கிளென் பிலிப்ஸ் 34 ரன்கள் எடுத்தார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் அனுபவ வீரர் டேரில் மிட்செல் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 101 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்து 63 ரன்களில் வெளியேறினார்.
கடைசி ஓவர்களில் மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக விளையாடியதால் ஸ்கோர் கொஞ்சம் உயர்ந்தது. 40 பந்துகளை எதிர்கொண்ட பிரேஸ்வெல் 2 சிக்சர் 3 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 251 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.
இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 10 ஓவர்கள் வீசிய ரவிந்திர ஜடேஜா 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார்.
March 09, 2025 6:03 PM IST