Last Updated:
தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மீதமுள்ள 7 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களில், 2 வாரத்திற்கு பிறகு, ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 7 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
தெலங்கானாவில் நீர்ப்பாசன திட்டத்திற்காக சுரங்கம் தோண்டும் பணியில் மண் சரிந்து 8 பேர் சிக்கிய நிலையில் ஒருவரது உடலை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி, ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் பணிகளுக்காக சுரங்கம் தோண்டும் பணியின்போது மண் சரிந்து 8 பேர் சிக்கினர். சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் கடந்த 2 வார காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள டி-2 புள்ளியில் மனித கால்தடங்களை மீட்பு படையினர் கண்டறிந்தனர். இதையடுத்து அப்பகுதியில் மண்ணை அகற்றியபோது ஒரு உடல் மீட்கப்பட்டது. மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் டிபிஎம் ஆபரேட்டர் குர்பிரீத் சிங் என அடையாளம் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மண்ணில் புதையுண்ட மீதமுள்ள 7 பேரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சடலமாக மீட்கப்பட்ட குர்பிரீத் சிங் குடும்பத்திற்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 10, 2025 7:58 AM IST


