சமூக ஊடகங்களில் மதங்களை இழிவுபடுத்தும் சிலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆரோன் அகோ டகாங் வலியுறுத்தியுள்ளார்.
ஸம்ரி வினோத், விஜயன் சவரிநாதன், சரவணன் சண்முகம், “Crime_Man” என்ற டிக்டாக் பயனர் ஆகிய நால்வர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏரா எஃப் எம் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தைப்பூச விழா காவடி சடங்கினை அவமதித்ததற்கான சர்ச்சைக்கு பதிலளிக்க மதங்களை இழிவுபடுத்தும் காணொலிகளை வெளியிட்டதாக இவர்கள் நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஸம்ரி வினோத், இந்துமத வழிபாடுகளை போதையில் உள்ளவர்களுடன் ஒப்பிட்டது இதற்கு பதிலாக விஜயன், சரவணன், Crime_Man ஆகியோர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் காணொலிகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செயல்கள் ஒருபோதும் ஏற்கத்தக்கவை அல்ல என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஆரோன் கடுமையாக கண்டித்தார். மேலும் இந்த வகையான பொறுப்பற்ற செயல்களை மீண்டும் செய்யக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.


