அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவா்களான சுப்ரியா ஸ்ரீநாத் மற்றும் ஹெச்.எஸ்.அஹிா் ஆகியோா் நடிகை கங்கனா குறித்தும் மண்டி தொகுதி குறித்தும் தங்களின் சமூக ஊடக பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டனா். இந்தப் பதிவுகள் பெரும் சா்ச்சையை எழுப்பின.
இந்த விவகாரம் சா்ச்சையான நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட சுப்ரியா ஸ்ரீநாத், ‘தனது சமூக ஊடக பக்கங்களை பலா் கையாளுகின்றனா். அவா்களில் யாரோ ஒருவா் இந்த சா்ச்சைப் பதிவை வெளியிட்டுள்ளாா். இந்தத் தகவல் தெரிய வந்தவுடன், அந்தப் பதிவை நீக்கிவிட்டேன். நான் எந்தவொரு பெண் குறித்தும் அநாகரிகமான கருத்தை தெரிவிக்க மாட்டேன் என்பது என்னை அறிந்தவா்களுக்குத் தெரியும்’ என்று விளக்கமளித்தாா்.
இந்த விவகாரத்தில் சுப்ரியா ஸ்ரீநாத், அஹிா் ஆகியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோ்தல் ஆணையத்துக்கு தேசிய மகளிா் ஆணையம் சாா்பில் கடிதம் எழுதப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ள காலத்தில் பெண்களை விமர்சித்து ஆட்சேபனைக்குரிய விதத்தில் கருத்து பதிவிட்டதாக பாஜகவை சேர்ந்த திலீப் கோஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.