இஸ்ரேலுக்கும் – ஹாமஸுக்கும் நடந்து வந்தப் போர் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக முடிவு செய்யப்பட்ட போர் நிறுத்த முதல் கட்ட ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முடிந்தது. இந்த ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏப்ரல் நடுப்பகுதியில் யூதர்களின் “பாஸ்ஓவர்’ விடுமுறை வருவதால் அதுவரை போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு அமெரிக்காவின் ஆலோசனைப் படியே நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பேச்சுவார்த்தைகள் பயனற்றவை என்று நம்பினால், முதல் கட்டத்திற்குப் பிறகு போரை மீண்டும் தொடங்கலாம் என்றும் இஸ்ரேல் எச்சரித்திருக்கிறது.

இந்த நிலையில், காஸாவில் உள்ள முஸ்லிம்கள் புனித ரமலான் மாதத்தில் முதல் நோன்பை துறந்த சில மணி நேரத்தில், ‘காஸாவிற்குள் செல்லும் உதவிகள், நிவாரணங்கள் உடனடியாக நிறுத்தப்படுகிறது’ என இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. பைடன் நிர்வாகத்தின் போது காஸாவிற்குள் கூடுதல் உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்த அமெரிக்கா, இல்லையென்றால் ஆயுதம் வழங்கப்படுவதை கட்டுப்படுத்துவோம் எனவும் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது அதே அமெரிக்காவின் ஆலோசனைப் படியே போர் நிறுத்த ஒப்பந்தம் முதல் உணவு, உதவிக் கட்டுப்பாடு வரை காஸாவுக்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது இஸ்ரேல்.

