Last Updated:
லீக் போட்டிகள் அனைத்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின் படி நடந்த நிலையில், தற்போது அரையிறுதி போட்டிகள் நடக்கும் மைதானம் குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. மற்ற அணிகள் விளையாடும் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் உள்ள மைதானத்திலும், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாயிலும் நடைபெறுகிறது.
லீக் போட்டிகள் அனைத்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின் படி நடந்த நிலையில், தற்போது அரையிறுதி போட்டிகள் நடக்கும் மைதானம் குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியா விளையாடும் முதல் அரையிறுதி போட்டி மார்ச் 4ஆம் தேதி துபாய் மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி மார்ச் 5ஆம் தேதி பாகிஸ்தானிலும் நடைபெறுகிறது. இந்தியா – நியூசிலாந்து போட்டி முடியும் வரை இந்திய அணியுடன், துபாய் மைதானத்தில் யார் விளையாடப்போகிறார்கள் என்ற தெளிவு இல்லாத நிலையில், அரையிறுதிக்குத் தேர்வாகியுள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா என இரண்டு அணிகளும் துபாய்க்கு வரும் நிலை உருவாகியுள்ளது.
ஆஸ்திரேலியா அணி சனிக்கிழமையே துபாய்க்கு வந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானிலிருந்து துபாய் செல்ல திட்டமிட்டுள்ளது. ஒருவேளை இந்திய அணி இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராகத் தோல்வியைச் சந்தித்தால், ஆஸ்திரேலியா அணி மீண்டும் லாகூருக்கு செல்ல வேண்டும். ஒரு வேளை வெற்றியடைந்தால், தென் ஆப்பிரிக்கா அணி லாகூருக்கு செல்ல வேண்டும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இருந்தாலும், இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முழுவதும், ஒரே ஹோட்டலில் தங்கி, ஒரே மைதானத்தில் விளையாடுகிறது. இது இந்திய அணிக்கு ‘சாதகமாக’ அமைவதாக அனைவரும் விமர்சித்து வருகிறார்கள். இந்திய அணிக்கு இந்த முறை சாதகமாக அமைவது மட்டுமின்றி, மற்ற அணிகள் ‘இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு மட்டும்’ துபாய் வருவதும், அந்த அணி வீரர்களுக்குக் களைப்பை ஏற்படுத்துகிறது என குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிக்க: “நீங்கள் உண்மையிலேயே ஒரு நல்ல அணியாக இருந்தால்…” – இந்தியாவுக்கு சவால் விட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்
இந்த நிலையில், அரையிறுதி எங்கு விளையாடுவோம் என்றே தெரியாமல், இரு அணிகளும், மாறி மாறி துபாய் வந்து, ஒரு அணி மட்டும் மீண்டும் செல்ல வேண்டும் என்ற நிலையை பல கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சித்து வருகிறார்கள்.
முதல் அரையிறுதி போட்டி துபாயில் மார்ச் 4ஆம் தேதியும், இரண்டாம் அரையிறுதி போட்டி மார்ச் 5ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
March 02, 2025 7:53 PM IST


