Last Updated:
Coconut Farming: இந்த புதுரகத் தென்னை மரங்களின் பராமரிப்பு செலவு குறைவு மற்றும் நோய் தாக்கம் குறைவு ஆகிய காரணங்களால் பலரும் தற்போது இந்தத் தென்னை மரங்களை விரும்பி நடவு செய்கின்றனர்.
தமிழகத்தில் தென்னை விவசாயம் வளம் மிக்க தொழிலாகப் பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் விவசாயிகளுக்கு நெல் போன்று தென்னை இருந்து கிடைக்கும் தேங்காய் முக்கிய பயிராகப் பார்க்கப்படுகிறது.
மற்ற பயிர்களைப் போல் இல்லாமல் இதற்கான பராமரிப்பு செலவு குறைவு மற்றும் ஊடுபயிர்கள் இட்டு லாபம் சம்பாதிக்கும் முறை போன்ற பல்வேறு காரணங்களினால் விவசாயிகள் அதிகம் தேர்வு செய்யும் முக்கிய பயிராகத் தென்னை விளங்குகின்றது.
ஆனால் ஒரு தென்னை மரம் வளர்ந்து அதிலிருந்து தேங்காய் பெறுவதற்குக் குறைந்தது 5 வருட காலங்கள் ஆகலாம். இதன் காரணமாகப் பலரும் தென்னை மரங்கள் வளர்ப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இரண்டு முதல் மூன்று வருட காலங்களில் பலன் தரும் புதுரக தென்னை மரங்கள் தற்போது அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: தகவல் தொழில்நுட்பத்தின் முன்னோடியான பாறை ஓவியங்கள்… அழியாமல் இருக்கும் அரிய பொக்கிஷம்…
இந்த புதுரக தென்னை மரங்களின் பராமரிப்பு செலவு குறைவு மற்றும் நோய் தாக்கம் குறைவு ஆகிய காரணங்களால் பலரும் தற்போது இந்த தென்னை மரங்களை விரும்பி நடவு செய்துள்ளனர். தென்னை விவசாயம் அதிகம் நடைபெறும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தற்போது இந்த புதுரக தென்னை அதிகளவு நடவு செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயி வசந்த் கூறுகையில், “நான் தென்னை விவசாயத்தில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். தற்போது குமரியில் உள்ள நாஞ்சில் நர்சரியில் பல்வேறு தென்னை இனங்கள் உள்ளது. இவற்றில் நெட்டை குட்டை, குட்டை நெட்டை போன்ற ஹைபிரிட் தென்னை கன்றுகள் உள்ளன.
தென்னை வகைகளில் நாட்டு வகைகளில் அதாவது உயரமாக வளரக்கூடிய மரங்கள் உண்டு. உயரம் குறைவாக வளரக்கூடிய மரங்களும் உண்டு அதில் ஒன்றுதான் குட்டை நெட்டை தென்னை மரங்கள். இந்த குட்டை நெட்டை மரங்களில் வருடத்திற்கு 300 தேங்காய்கள் மகசூல் ஈட்டலாம். சாதாரண நாட்டுத் தென்னை மரத்தில் 12 பாளைகள் வரை காய்க்கும் ஆனால் குட்டை நெட்டை மரங்களில் 18 பாளைகள் வரை காய்க்கும்.
இதையும் படிங்க: Ramadan 2025: பெரும் பாக்கியம் தரும் 30 நாள் நோன்பு… நோன்பு நாளில் பின்பற்ற வேண்டியவை என்ன…
இந்த வகை மரங்கள் 30 ஆண்டுகள் வரை நல்ல செழித்து தேங்காய்கள் காய்க்கும் அதன்பின்னர் மெதுவாகத் தேங்காய் குறைந்து காணப்படும். இந்த மரங்களின் நடும்பொழுது நடவு உரம், தொழு உரம், மண்புழு உரம் போன்றவற்றை இட்டு முறையான பராமரிப்பு செய்து வந்தாலே போதுமானது.
தென்னை மரங்களைப் பொருத்தவரை வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் விவசாயிகளைக் கவலை அடைய செய்கிறது. இதற்கு தேவையான மருந்து தெளித்தாலே போதுமானது. தற்போதைய காலத்தில் தேங்காய்களின் விலை லாபகரமானதாகவே உள்ளது. எனவே எந்த வகைத் தென்னங்கன்றுகளை வளர்த்து வந்தாலும் அது லாபகரமானதாகவே அமையும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Kanniyakumari,Tamil Nadu
March 02, 2025 7:36 PM IST

