Last Updated:
வலுவான இங்கிலாந்து அணியை வீழ்த்திய மனநிலையுடன் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவை நாளை எதிர்கொள்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழையும்.
தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும் சூழலில் “வாழ்வா சாவா” என்கிற ரீதியில் இந்த போட்டி நடைபெறும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என்று விளையாட்டு விமர்சகர்கள் கூறியுள்ளனர். துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பி பிரிவில் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு உள்ளன.
இதில் 2 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும். இந்நிலையில் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்யக்கூடிய போட்டியில் நாளை ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே லாகூர் மைதானத்தில் மேட்ச் நடைபெற உள்ளது. இந்த இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆப்கானிஸ்தானை விடவும் அதிக புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். ஒருவேளை மழை குறுக்கீடு காரணமாக போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பெறும். இருப்பினும் நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முன்னேறும்.
அந்த சூழலில் ஆப்கானிஸ்தான் போட்டியிலிருந்து முழுவதுமாக வெளியேறி விடாது. அதற்கு அடுத்ததாக தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்தால் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு ஆப்கானிஸ்தானுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இப்படி பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை இந்த போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. வலுவான இங்கிலாந்து அணியை வீழ்த்திய மனநிலையுடன் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவை நாளை எதிர்கொள்கிறது.
February 27, 2025 8:14 PM IST


