Last Updated:
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் 19ஆம் தேதி தொடங்கிய நிலையில் அடுத்த ஐந்து நாட்களிலேயே போட்டி நடத்தும் பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது கவனிக்கத்தக்கது
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதில் மழை குறுக்கிட்டதன் காரணமாக டாஸ் கூட போடாமல் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த பிரிவில் மூன்று மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டி இன்று நடைபெறவிருந்தது.
இதில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்தன. ஆனால் மழை குறுக்கிட்டதால் இந்த போட்டியை டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. இதுவரை தலா 3 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடியுள்ளன.
அவற்றில் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில் இன்று நடைபெற இருந்த போட்டி ரத்தானது. இதன் அடிப்படையில் 2 அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்ற போதிலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் மூன்றாம் இடத்திலும் பாகிஸ்தான் நான்காம் இடத்தில் உள்ளன.
வங்கதேசத்திற்கு நெட் ரன்ரேட் -0.443 ஆகவும் பாகிஸ்தானுக்கு நெட் ரன்ரேட் – 1.087 ஆகவும் உள்ளது. ஏற்கனவே இந்த தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தை பாகிஸ்தான் வெளிப்படுத்தி வந்த நிலையில், குரூப் ஏ பிரிவில் அந்த அணி கடைசி இடத்தை பிடித்திருப்பது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் கேப்டன்ஷிப்பை மாற்ற வேண்டும் என்றும், இன்னும் சிலர் ஒட்டுமொத்த அணியையே மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் 19ஆம் தேதி தொடங்கிய நிலையில் அடுத்த ஐந்து நாட்களிலேயே போட்டி நடத்தும் பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது கவனிக்கத்தக்கது. நாளை ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முக்கியமான ஆட்டம் நடைபெறுகிறது. இதில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
February 27, 2025 7:04 PM IST


