பெங்களூரு: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 177 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான விராட் கோலி 49 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அதேவேளையில் இறுதிக்கட்ட ஓவர்களில் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களும், மஹிபால் லாம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களும் விளாசி பெங்களூரு அணி வெற்றிக்கோட்டை கடக்க உதவினார்கள்.
இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி கூறியதாவது: உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த மட்டும் எனது பெயர் பயன்படுத்தப்படுகிறது என்பது எனக்குத் தெரியும்.ஆனால், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் திறன் என்னுள் இன்னும் இருப்பதாக நினைக்கிறேன். டி 20 கிரிக்கெட்டில் நான் தொடக்க வீரராக களமிறங்கி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க முயற்சிக்கிறேன். ஆனால் விக்கெட்டுகள் விழத் தொடங்கும் போது, சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட வேண்டியது உள்ளது.
பெங்களூரு ஆடுகளம் வழக்கமானது போன்று இல்லை. இருவிதமாக செயல்பட்டது. இதனால் சரியான கிரிக்கெட் ஷாட்களை விளையாட வேண்டியிருந்தது, பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அப்பால் அடிக்க முடியவில்லை. ஒரு சிலவற்றை முயற்சித்தேன். மறுமுனையில் பெரிய அளவிலான ஷாட்கள் மேற்கொள்ளக்கூடிய வீரர் தேவை என்று உணர்ந்தேன்.
ஆனால் அது நடக்கவில்லை, ஏனெனில் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத் விரைவாக வெளியேறினர். கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுக்க முடியாமல் போனது ஏமாற்றமே. எனினும், இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு விளையாடுவதால் இது ஒன்றும் மோசமான இன்னிங்ஸ் இல்லை. இவ்வாறு விராட் கோலி கூறினார்.