Last Updated:
மகா கும்பமேளாவில் அசோக் குமார் தனது மனைவி மீனாக்ஷியை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் வெளிவந்தது. திருமணத்தை மீறிய உறவுக்காக அவர் இந்த கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
டெல்லி, திரிலோக்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள் அசோக் குமார், மீனாக்ஷி தம்பதி. இவர்களுக்குத் திருமணம் முடிந்து ஆஷிஷ் மற்றும் அஷ்வின் என இரு மகன்கள் உள்ளனர். கடந்த 18-ம் தேதி கணவன் மனைவியான அசோக் குமார் மற்றும் மீனாக்ஷி இருவரும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் புனித நீராட அங்கு சென்றுள்ளனர்.
அங்குச் சென்றது, புனித நீராடியதை எல்லாம் அசோக் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். பிறகு கும்பமேளாவில் இருந்து வீடு திரும்பிய அசோக் குமார், தனது மகன் ஆஷிஷிடம் அம்மா மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் தொலைந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட மற்றொரு மகன் அஷ்வின், அம்மாவைத் தேடி கும்பமேளாவிற்குச் சென்றுள்ளார்.
ஒரு பக்கம் தனது அம்மாவைத் தேடி ஒரு மகன் கும்பமேளா செல்ல, பிரயாக்ராஜ் காவல்துறைக்கு 19-ம் தேதி காலை அங்கிருந்த ஒரு விடுதியின் மேலாளர், தங்கள் விடுதியின் குளியலறையில் ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்டு மரணித்திருப்பதாகத் தகவல் கொடுத்தார். அந்தத் தகவலை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையைத் துவக்கினர்.
இதையும் படியுங்கள் : கர்நாடகாவில் தாக்கப்பட்ட மராத்திய ஓட்டுநர்… அரசுப் பேருந்துகளை நிறுத்திய மகாராஷ்டிரா… மொழி பிரச்சனை காரணமா?
விடுதியில், அந்த அறையில் தங்கியவர்களின் அடையாள அட்டையைக் காவல்துறையினர் கேட்டபோது, அடையாள அட்டையை வாங்காமல் விடுதியை வாடகைக்கு விட்டதாக அந்த மேலாளர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸார், அந்தப் பெண்ணின் புகைப்படத்தைச் செய்தி நாளிதழிலும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து அந்தப் பெண் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
இந்த விளம்பரத்தை 20-ம் தேதி காலை மீனாக்ஷியின் சகோதரரும், அவரின் மகனும் பார்த்துள்ளனர். பிறகு அவர்கள் உடனடியாக டெல்லியில் பிரயாக்ராஜ் புறப்பட்டுச் சென்று காவல்துறையினரைச் சந்தித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் காவல்துறையினருக்கு மீனாக்ஷியின் கணவர் மீது சந்தேகம் வந்துள்ளது. அதன் அடிப்படையில், மீனாக்ஷியின் கணவர் அசோக் குமாரைப் பிடித்த காவல்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அசோக் குமார், தனக்குத் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், எனவே அந்தப் பெண்ணுடன் வாழ்வதற்குத் தனது மனைவியைக் கும்பமேளா அழைத்துவந்து அங்கு விடுதியில் கழுத்தை அறுத்துக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முன்பாகவே மூன்று மாதமாகத் தனது மனைவியைக் கொல்லத் திட்டமிட்டுவந்ததாகவும் அவர் பகீர் வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார்.
அவரின் இந்த வாக்குமூலத்தை வைத்து தற்போது காவல்துறையினர் அசோக் குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
February 23, 2025 6:58 PM IST


