தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட பதறவைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
நேற்று பிப்ரவரி பிப்ரவரி 16 (ஞாயிற்றுக்கிழமை) ஐதராபாத்தின் மேட்சல் (medchal) பகுதியில் உள்ள பரபரப்பான NH 44 தேசிய நெடுஞ்சாலையில் வைத்து இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. அவ்வழியாக பல வானங்கள் அவ்வேளையில் சென்றும் யாரும் கொலையை தடுக்க முன்வரவில்லை. கத்தியால் குத்திவிட்டு இருவரும் கத்தியுடன் சாவகாசமாக சாலையை கடந்து செல்வதை மக்கள் வேடிக்கை பார்த்து நின்றனர்.
போலீசார் கூற்றுப்படி உயிரிழந்தவர் 25 வயதான உமேஷ். கத்தியால் குத்தியவர்கள் உமேஷின் சொந்த தம்பி ராகேஷ், மற்றும் உறவினர் லக்ஷ்மணன் என்று தெரியவந்துள்ளது. உமேஷ் குடித்துவிட்டு அடிக்கடி தனது குடும்பத்தினருடன் சண்டை பிடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தம்பி ராகேஷ் அண்ணனிடம் கேட்டுள்ளார். இதனால் சம்பவம் நடந்த நேற்று, உமேஷ் குடித்துவிட்டு தம்பியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். கட்டை ஒன்றை எடுத்து தம்பியை உமேஷ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராகேஷ், உறவினர் லக்ஷ்மணன் உடன் சேர்ந்து அண்ணனை தாக்க முயன்றார்.
அச்சமடைந்த உமேஷ் அவர்களிடம் இருந்து தப்பி வீட்டை விட்டு ஓடியுள்ளார். உமேஷை துரத்திச் சென்ற இருவரும் வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள சாலையில் வைத்து அவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தப்பியோடிய தம்பியையும் உறவினரையும் தேடி வருகின்றனர்.