ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட புதிய ஸ்ட்ரீமிங் தளமான ஜியோஹாட்ஸ்டார், இன்று (14.02.2025) தொடங்கப்பட்டது.
இந்த ஜியோஸ்டாரில் 2025ஆம் ஆண்டுக்குள், புதிய சந்தா கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளின் டிஜிட்டல் உரிமத்தைப் பெற்ற ஜியோசினிமா, 2023 முதல் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பி வருகிறது.
விரைவில், ஐபிஎல் போட்டிகள் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ரசிகர்கள் போட்டிகளைப் பார்க்க இனி சந்தா கட்டணம் செலுத்த வேண்டும்.
அதாவது சிறிது நேரத்திற்கு ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், அதன் பிறகு ஒரு நிகழ்ச்சியை பார்க்க பயனர்கள் தங்களுக்குத் தேவையான சந்தாத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஜியோசினிமா, குளிர்கால ஒலிம்பிக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் போன்ற தொடர்களுக்கான உரிமத்தையும் பெற்றுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டார் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகள் மற்றும் இங்கிலாந்து பிரீமியர் லீக் உரிமைகளைக் கொண்டுள்ளது. ஜியோஹாட்ஸ்டாரில் ரூ.149 முதல் சந்தாத் திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும், அடிப்படைத் சந்தாவாக ரூ.149 இருக்கும் என்றும், மூன்று மாதங்களுக்கு விளம்பரமில்லாமல் பார்க்க ரூ.499 திட்டமும் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அமலானது பிசிசிஐ விதிமுறைகள்..! இந்திய அணி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
ஐபிஎல் 2023 சீசனின் டிஜிட்டல் உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு வயாகாம்18 நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. ஸ்டார் இந்தியா, இந்திய துணைக் கண்டத்திற்கான தொலைக்காட்சி உரிமத்தை ரூ.23,575 கோடிக்குப் பெற்றுள்ளது. இந்த தகவல்கள் குறித்து பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மார்ச் 22ஆம் தேதி ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
February 14, 2025 2:16 PM IST