சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சுய சான்றளிக்கப்படாத குடியிருப்பு மற்றும் இதர கட்டிடங்களின் அனுமதி மற்றும் பாதாள சாக்கடை திட்ட வைப்புத் தொகை ஆகியவற்றை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒற்றைச் சாளர முறையில், கட்டிட அனுமதியை எளிமையாக்கும் வகையில், 2500 சதுரடி வரை பரப்பிலான நிலத்தில் 3500 சதுரடி வரையிலான தரைதளம் மற்றும் முதல் தளம் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் இணையவழி கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டணங்களும் புதிதாக நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி, தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கான ஒருங்கிணைந்த கட்டணங்கள் , சுயசான்று அடிப்படையிலான குடியிருப்பு கட்டிடங்கள் தவிர்த்த மற்ற கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்குவதற்கான ஒருங்கிணைந்த கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அரசாணையில் கூறியிருப்பதாவது: சுயசான்று அடிப்படையில் அல்லாத பிற கட்டிடங்களை பொறுத்தவரை, நகராட்சி நிர்வாக இயக்குனர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், சுயசான்றளிப்பு வரையறைக்கு உட்பட்ட கட்டிடங்களை தவிர இதர அனைத்து குடியிருப்பு கட்டுமானங்கள் மற்றும் அனைத்து குடியிருப்பு அல்லாத கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க சென்னை மாநகராட்சி தவிர்த்த இதர மாநகராட்சிகள், நகராட்சிகளில் ஒரே மாதிரியான கட்டிட உரிம கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என தெரிவித்தார்.
மேலும், சுயசான்றளிப்பு முறையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களையே, அந்த வரையறைக்கு உட்படாத இதர குடியிருப்பு கட்டுமானங்களுக்கும் நிர்ணயிக்கலாம் என்றும், குடியிருப்பு அல்லாத கட்டுமானங்களுக்கு, சுயசான்றளிப்பு முறையில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்களை விட 125 சதவீதம் அதாவது 1.25 மடங்குக்கு குறையாமல் இருக்கும்படி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் நிர்ணயிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சுயசான்றளிப்பு வரையறைக்கு உட்படாத குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டுமானங்களுக்கு ஒற்றைச் சாளர இணைய முகப்பில் (single window portal) கட்டிட அனுமதி வழங்க ஏதுவாக ஒருங்கிணைந்த கட்டணங்களை நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியில், தற்போது வசூலிக்கப்படும் கட்டிட உரிமக் கட்டணங்களையே பின்பற்றலாம்.
சென்னை மாநகராட்சி தவிர்த்த அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளிலும் சுயசான்றளிப்பு கட்டிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணங்களையே, சுயசான்றளிப்பு வரையறைக்குள் வராத இதர குடியிருப்புகட்டுமானங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3500 சதுரடிக்கு மேல் கட்டப்படும் கட்டங்களுக்கு, சென்னை தவிர்த்து இதர 24 மாகநராட்சிகளை பொறுத்தவரை சிறப்பு நிலை ஏ பிரிவு மாநகராட்சிகளில் சதுர மீட்டருக்கு ரூ.950, சதுரடிக்கு ரூ.88, பி பிரிவு மாநகராட்சிகளில் சதுர மீட்டருக்கு ரூ.900, சதுரடிக்கு ரூ.84, தேர்வு நிலை என்றால் ச.மீக்கு ரூ.850, சதுரடிக்கு ரூ.79, நிலை-1, 2 மாநகராட்சிகளில் ச.மீக்கு ரூ.800, சதுரடிக்கு ரூ.74ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 134 நகராட்சிகளை பொறுத்தவரை, சிறப்பு நிலை, தேர்வு நிலை நகராட்சிகளில் சதுர மீட்டருக்கு ரூ.800, சதுரடிக்கு 74ம், நிலை -1,2 நகராட்சிகளில் சதுரமீட்டருக்கு ரூ.750, சதுரடிக்கு ரூ.70-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம், செங்கல்பட்டு, திருப்பூர்,கோயம்புத்தூர் மாவட்ட நகர ஊரமைப்பு பகுதிகளில் உள்ள பேரூராட்சிகள் தவிர்த்து மற்ற பேரூராட்சிகளில் சுயசான்று கட்டிடங்களுக்கு நிணயிக்கப்பட்ட அதே கட்டணங்களே இதர குடியிருப்பு கட்டுமானங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறப்பு நிலை பேரூராட்சிகளில் சதுரமீட்டருக்கு ரூ.750, சதுரடிக்கு ரூ.70, தேர்வு நிலை என்றால் ரூ.700, ரூ.65, நிலை -1 பேரூராட்சிகள் என்றால் சதுர மீட்டருக்கு ரூ.590, சதுரடிக்கு ரூ.55, நிலை -2 பேரூராட்சிகளில் சதுர மீட்டருக்கு ரூ.485, சதுரடிக்கு ரூ.45 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட நகர ஊரமைப்பு பகுதிகளில் உள்ள பேரூராட்சிகளில் 3500 சதுரடிக்கு மேல் கட்டப்படும் குடியிருப்புகளுக்கான கட்டணம் சிறப்பு நிலை பேரூராட்சிகளுக்கு சதுர மீட்டருக்கு ரூ.750,சதுரடிக்கு ரூ.70, தேர்வு நிலை என்றால் சதுர மீட்டருக்கு ரூ.700, சதுரடிக்கு ரூ.65, நிலை -1 என்றால் சதுர மீட்டருக்கு ரூ.680, சதுரடிக்கு, ரூ.63, நிலை -2 என்றால் சதுர மீட்டருக்கு ரூ.650, சதுரடிககு ரூ.60 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல், சென்னை மாநகராட்சி தவிர்த்து இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் குடியிருப்பு அல்லாத கட்டுமானங்களுக்கு, கட்டிட உரிமம் பெற, நிர்ணயிக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டணங்களை விட 125 தவீதம் அதாவது 1.25 மடங்குக்கு குறையாலம் கட்டணத்தை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் மன்றங்கள் நிர்ணயிக்கலாம், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, நகராட்சி நிர்வாக இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, குடியிருப்பு அல்லாத கட்டுமானங்களை பொறுத்தவரை, மாநகராட்சிகளில் நிலைக்கேற்ப சதுர மீட்டருக்கு ரூ.1188 முதல் ரூ.1000 வரையும், சதுரடிக்கு ரூ110 முதல்ல93 வரையும், நகராட்சிகளில் நிலைக்கேற்ப சதுர மீட்டருக்கு ரூ.1000 முதல் ரூ.938 வரையும், சதுரடிக்கு ரூ.93 முதல் 87 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடைக்கான வைப்புத் தொகை, இணைப்புக்கு மாநகராட்சிகளில் 3500 சதுரடிக்குள் குடியிருப்பு என்றால் ரூ.10 ஆயிரம், இதர கட்டிடங்களுக்கு ரூ.20 ஆயிரம், 3501 முதல் 10 ஆயிரம் சதுரடி வரை குடியிருப்பு என்றால் ரூ.15 ஆயிரம், இதர கட்டிடங்களுக்கு ரூ.30 ஆயிரம், 10 ஆயிரம் சதுரடிக்கு மேல், குடியிருப்புகளுக்கு ரூ.25 ஆயிரம், இதர கட்டிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
நகராடசிகளில் 3500 சதுரடிக்கு கீழ் குடியிருப்பு என்றால் ரூ.7500, இதர கட்டிடங்களுக்கு ரூ.15 ஆயிரம், 3501 முதல் 10 ஆயிரம் சதுரடி வரை குடியிருப்பு என்றால் ரூ.10 ஆயிரம், இதர கட்டிடங்களுக்கு ரூ.20 ஆயிரம், 10 ஆயிரம் சதுடிக்கு மேல் குடியிருப்பு என்றால் ரூ.20 ஆயிரம், இதர கட்டிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.