Last Updated:
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 20-ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறுகின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலகின் நம்பர் ஒன் பவுலரான பும்ரா இடம்பெறவில்லை.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது பும்ராவுக்கு முதுகு பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக ஓய்வில் இருந்து வருகிறார். சாம்பியன்ஸ் கோப்பை தொடர் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இன்னும் சில வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் பும்ராவை சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பிசிசிஐ சேர்க்கவில்லை.
அவருக்கு பதிலாக ஹர்ஷித் ரானா அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த சில போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை ஹர்ஷித் ரானா வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் பும்ரா அணியில் இடம் பெறாதது அணிக்கு முழுமையான பலத்தை அளிக்காது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் பும்ரா இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அடுத்த பதிலில் கூறியதாவது-
யாருக்கு காயம் ஏற்பட்டாலும் அவர் ஓய்வில்தான் இருக்க வேண்டும். இது குறித்து நம்மால் விவரமாக சொல்ல முடியாது. உண்மையிலேயே அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்.
அதே நேரம் முகமது ஷமி, ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சீங் ஆகியோர் அணியில் உள்ளனர். இந்தியாவுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கும். உலக தரம் வாய்ந்த பவுலர் முகமது ஷமி அணிக்கு திரும்பியுள்ளார் பவுலர்களுக்கு இடையிலான வேலைப்பளுவை சீரமைப்போம்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இந்திய அணி முழுமையாக தயாராக உள்ளது என்று தெரிவித்தார். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 20-ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறுகின்றன.
February 13, 2025 2:47 PM IST


