Last Updated:
ரெப்போ ரேட் என்பது கமர்ஷியல் வங்கிகளுக்கு RBI வழங்கும் கடன் விகிதமாகும். ரெப்போ ரேட் குறைக்கப்படும் போது..
சமீபத்தில் நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் MPC கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25%-ஆக நிர்ணயிப்பதாக அறிவிக்கப்பட்டது. RBI கவர்னராக புதிதாக நியமிக்கப்பட்ட சஞ்சய் மல்ஹோத்ராவின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற MPC கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவானது மே, 2020-க்கு பிறகு நாட்டில் வட்டி விகித குறைப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி சமீபத்தில் எடுத்த இந்த முடிவால் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் கணிசமாக குறையும், இது வீடு வாங்குபவர்களுக்கு நிம்மதியை தரும். ரெப்போ விகித குறைப்பு மூலம் இப்போது வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும், இதனால் வீட்டு கடன்களும் முன்பை விட மலிவு விலையில் கிடைக்கும்.
ரெப்போ ரேட் என்பது கமர்ஷியல் வங்கிகளுக்கு RBI வழங்கும் கடன் விகிதமாகும். ரெப்போ ரேட் குறைக்கப்படும் போது, வங்கிகள் குறைந்த செலவில் RBI-யிடமிருந்து நிதியை கடன் வாங்கலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தை வங்கிகள் தானாகவே குறைக்கும். இந்த சமீபத்திய நடவடிக்கை காரணமாக வீட்டு கடன்களுக்கான EMI-க்கள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் ஏற்கனவே வீட்டு கடனுக்கான EMI செலுத்தி கொண்டிருப்பவர்கள் மற்றும் இதன் பிறகு வீட்டு கடன் வாங்குபவர்கள் பயன் பெறுவார்கள்.
நஹார் குழுமத்தின் துணைத்தலைவரும், NAREDCO- மகாராஷ்டிராவின் மூத்த துணைத் தலைவருமான மஞ்சு யாக்னிக் பேசுகையில், “வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைப்பது வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கும், EMI மூலம் செலுத்தும் வட்டி விகிதம் குறைவதன் மூலம் சொத்துக்களை வாங்குவது முன்பை விட மலிவாக இருக்கும். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மக்களிடையே வீடுகள் வாங்கும் தேவையை அதிகரிக்கும் மற்றும் அதிகமான மக்களை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல டெவலப்பர்கள் நிதியை எளிதாக அணுகுவதன் மூலம் பயனடைவார்கள், மேலும் அவர்களின் ஹவுசிங் ப்ராஜக்ட்டுகளை விரைவாக முடிக்கவும், இதன் மூலம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யவும் உதவியாக இருக்கும் என்றார்.
இதையும் பாருங்க: Economy: அமெரிக்கா, சீனா, இந்தியா இல்லை.. உலகின் டாப் 10 நிலையான பொருளாதார நாடுகள்.. பட்டியல் இதோ!
வீடு வாங்குபவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு அறிவிப்பு இது, அதே போல பல மாதங்களாக EMI-க்கள் அதிகம் செலுத்த வேண்டிய சூழல் மற்றும் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதங்களால் பலரும் அழுத்தத்தில் இருப்பதாக மும்பை மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி கூட்டமைப்பின் தலைவர் பிரகாஷ் தரேகர் கூறியுள்ளார். உண்மையில் ரெப்போ ரேட் தொடர்பான இந்த அறிவிப்புக்கு முன் பணவீக்கத்தை நிர்வகிக்க, நாணய நிலைத்தன்மையைப் பராமரிக்க ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தைக் குறைக்குமா அல்லது மாற்றமின்றி அப்படியே வைத்திருக்குமா என்பது குறித்து நிபுணர்கள் நிச்சயமற்ற கருத்துக்களையே கொண்டிருந்தனர்.
எனினும் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதாகவும் தோன்றிய காரணத்தால் ரெப்போ ரேட்டை குறைக்க RBI முடிவு செய்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதே போல 2025-26-ஆம் ஆண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6.7%-ஆக இருக்கும் என்றும் RBI கணித்துள்ளது.
February 10, 2025 3:43 PM IST


