Last Updated:
நாளை மறுதினம் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
வீரர்கள் பற்றாக்குறை காரணமாக ஃபீல்டிங் செய்வதற்கு பயிற்சியாளர் களத்தில் இறங்கிய சுவாரஸ்ய சம்பவம் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 போட்டிகள் உள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒருமுறை மோதும். இதில் அதிக புள்ளிகள் பெறும் அணிகள் 14ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும். இந்த இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.
நாளை மறுதினம் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 304 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 308 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டியது.
நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 113 பந்துகளில் 133 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். இந்த போட்டியின் போது வீரர்கள் பற்றாக்குறை காரணமாக தென்னாப்பிரிக்க அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் வாண்டிலே குவாவு சப்ஸ்டிட்யூட் ஃபீல்டராக களத்தில் இறங்கினார்.
நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இந்த சுவாரஸ்ய நிகழ்வு 37வது ஓவரில் நடந்தது. மேலும் சுவாரசிய சம்பவமாக அவர் வில்லியம்சன் அடித்த பந்தை திறமையாக தடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு உதவினார்.
இதுபோன்று மாற்று ஃபீல்டராக பயிற்சியாளர்கள் களம் இறங்குவது புதிதல்ல. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி பயிற்சி ஆட்டத்தின் போது நமிபியாவுக்கு எதிரான மேட்சில் ஃபீல்டராக களமிறங்கினார்.
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணையின் 12வது மற்றும் 13வது வீரர்களாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் மார்கஸ் ட்ரெஸ்கோதிக் மற்றும் பவுல் காலிங்வுட் ஆகியோரின் பெயர் இடம் பெற்று இருந்தது கவனிக்கத்தக்கது.
February 10, 2025 8:10 PM IST


